வெண்கலம் வென்ற சிங்கப்பூர் ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி

4 mins read
சிறப்பாகச் செய்த இளம் கிரிக்கெட் விளையாட்டாளர்கள்
3497eca9-d1a0-4305-a0a2-969df73b5645
வேகப்பந்து வீச்சாளர் தாக்‌ஷ் தியாகி,18, பங்கெடுத்த முதல் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். - படம்: தாய்லாந்து கிரிக்கெட் சங்கம்
multi-img1 of 4

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் ஆண்கள் கிரிக்கெட் அணி டி20 போட்டியில் வெண்கலம் வென்றுள்ளது.

நான்கு புள்ளிகளுடன் சிங்கப்பூர் அணி மூன்றாம் நிலையைப் பிடித்தது.

கிரிக்கெட்டில் முதல் தங்கத்தை வென்ற மலேசியா, அது விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வென்றது.

“பெரும்பாலும் இளையர்களே இடம்பெற்றுள்ள அணிக்கு வெண்கலம் கிடைத்திருப்பது என்பது நல்லதுதான். எனினும், இந்த அணிக்குத் தங்கத்தை வெல்லும் திறனுள்ளது,” என்றார் சிங்கப்பூர் அணியின் மேலாளர் சேட்டன் சூர்யவன்‌ஷி.

வெண்கலம் வென்ற தேசிய கிரிக்கெட் டி20 அணி.
வெண்கலம் வென்ற தேசிய கிரிக்கெட் டி20 அணி. - படம்: தாய்லாந்து விளையாட்டு மன்றம்
வெண்கலம் வென்ற தேசிய கிரிக்கெட் டி20 அணி.
வெண்கலம் வென்ற தேசிய கிரிக்கெட் டி20 அணி. - படம்: தாய்லாந்து விளையாட்டு மன்றம்

அடி, காயங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்து போராடினர்

பிலிப்பீன்சுக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே சிங்கப்பூர் அணித் தலைவர் ரெஸ்ஸா கஸ்னாவிக்கு இடக்கைவிரலில் இரு இடங்களில் எலும்பு முறிந்து, நகம் சிதைந்தது.

அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், அணி சிரமப்படுவதைக் கேள்விப்பட்டு, சிகிச்சை பெறாமல் களத்துக்குத் திரும்பிவிட்டார்.

கையில் கட்டுடன், வலியுடன் களமிறங்கிய அவர், 41 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுத்தார்; கடைசிவரை அவர் விக்கெட்டை இழக்காவிட்டாலும் வெற்றிக்கு அது போதவில்லை.

“பிலிப்பீன்சை வெல்லக்கூடிய நிலையில்தான் இருந்தோம். ஏற்கெனவே நான்கு விக்கெட்டுகள் எடுத்திருந்தோம். ஆனால், அணித் தலைவர் இல்லாமல் இளம் விளையாட்டாளர்கள் சிரமப்பட்டனர்.

“ஆனால், ஒட்டுமொத்தமாக நாங்கள் சிறப்பாகத்தான் செய்துள்ளோம். பயிற்றுவிப்பாளர் அம்ஜாத் நல்ல வழிகாட்டுதலும் தந்தார்,” என்றார் ரெஸ்ஸா.

அதையடுத்து மற்ற ஆட்டங்களில் ரெஸ்ஸாவுக்குப் பதிலாக அமான் தேசாய், 23, அணியை வழிநடத்தினார். தேசிய U-16, U-19 அணிகளில் தலைவராக இருந்திருந்தாலும், பெரியவர் அணியை வழிநடத்துவது அவருக்கு முதல் அனுபவம்.

“நாங்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்தோம். தேவைப்பட்டபோது விளையாட்டளர்கள் அனைவரும் துணை நின்றார்கள்,” என்றார் அமான்.

அணித் தலைவராகத் தன் முதலிரு போட்டிகளில் வெற்றியையும் அடுத்த போட்டியில் தோல்வியையும் சந்தித்தார் அமான் தேசாய்.

“முதல் போட்டியில் தோல்விகண்டாலும் நான் விளையாட்டாளர்களிடம் கூறியது என்னவெனில், விளையாட்டு என்றால் ஓர் அணி தோற்றுத்தான் ஆகவேண்டும். மற்ற அணிகளின் விளையாட்டாளர்களில் பலரும் இரண்டு, மூன்று முறை தென்கிழக்காசிய விளையாட்டுகளில் விளையாடியவர்கள். நம் அணியில் பெரும்பாலோர் முதன்முறையாக விளையாடுபவர்கள். சிலருக்கு - உதாரணத்துக்கு வேதாந்த் நாக்பால் - வயது 17-18தான்,” என்றார் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அம்ஜாத் மஹ்பூப்.

சிங்கப்பூர் ஆண்கள் டி20 அணியின் தலைமைத்துவப் பொறுப்பைப் புதிதாக ஏற்ற அமான் தேசாய் (வலம்).
சிங்கப்பூர் ஆண்கள் டி20 அணியின் தலைமைத்துவப் பொறுப்பைப் புதிதாக ஏற்ற அமான் தேசாய் (வலம்). - படம்: தாய்லாந்து கிரிக்கெட்
பந்துவீச்சில், பந்தடிப்பதில் திறன் காட்டிய அஸ்லான் அலி ஜாஃப்ரிக்கு வெண்கலப் பதக்கத்தை அணிவிக்கும் அணி மேலாளர் சேட்டன்.
பந்துவீச்சில், பந்தடிப்பதில் திறன் காட்டிய அஸ்லான் அலி ஜாஃப்ரிக்கு வெண்கலப் பதக்கத்தை அணிவிக்கும் அணி மேலாளர் சேட்டன். - படம்: தாய்லாந்து விளையாட்டு மன்றம்

கடைசி ஓவரில் வந்த இரு வெற்றிகள்

அஸ்லான் ஜாஃப்ரி, நீல் கார்னிக் இருவரும் ஆளுக்கு மூன்று விக்கெட்டுகளையும் கண்ணுசாமி சதீ‌ஷ் இரு விக்கெட்டுகளையும் எடுத்து இந்தோனீசியாவை 151 ஓட்டங்களுக்குக் கட்டுப்படுத்தினர். சிங்கப்பூரின் ராவுல் ‌‌ஷர்மா 20 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிக்குக் கொண்டுசென்றார்.

இந்தோனீசியாவுக்கு எதிராக, 20 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற ராவுல் ‌‌ஷர்மா, 22.
இந்தோனீசியாவுக்கு எதிராக, 20 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற ராவுல் ‌‌ஷர்மா, 22. - படம்: தாய்லாந்து கிரிக்கெட்

தாய்லாந்தை நான்கு ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது சிங்கப்பூர். சாய் ஹர்‌‌‌ஷா வேணுகோபால் 23 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து சிங்கப்பூரை 156 ஓட்ட எண்ணிக்கைக்கு இட்டுச்சென்றார்.

தாய்லாந்து அணிக்கு எதிராகக் கடைசி ஓவரைச் சிறப்பாகப் போட்ட நீல் கார்னிக்.
தாய்லாந்து அணிக்கு எதிராகக் கடைசி ஓவரைச் சிறப்பாகப் போட்ட நீல் கார்னிக். - படம்: தாய்லாந்து கிரிக்கெட்
23 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து சிங்கப்பூரை 156 ஓட்ட எண்ணிக்கைக்குக் கொண்டுசென்ற சாய் ஹர்‌‌‌ஷா வேணுகோபால், 23. அவர் ஃபிலிப்பின்சுக்கு எதிராகவும் நன்கு விளையாடினார்.
23 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து சிங்கப்பூரை 156 ஓட்ட எண்ணிக்கைக்குக் கொண்டுசென்ற சாய் ஹர்‌‌‌ஷா வேணுகோபால், 23. அவர் ஃபிலிப்பின்சுக்கு எதிராகவும் நன்கு விளையாடினார். - படம்: தாய்லாந்து கிரிக்கெட்

தாய்லாந்து அணியின் சுத்திசன் 73 ஓட்டங்களுடன் கடைசி ஓவர் வரை பந்தடித்தார். கடைசி ஓவரில் அவர் சிக்சர் அடித்த மறுகணமே நீல் கார்னிக் அவரை வெளியேற்றி சிங்கப்பூரை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

தாய்லாந்துக்கு எதிரான வெற்றிக்கு, ஓர் ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்து ஓட்டங்களை விடாத கண்ணுசாமி சதீ‌ஷும் முக்கியக் காரணம். தேசிய U-19, ராஃபிள்ஸ் கல்வி நிலைய அணிகளுக்கு விளையாடியுள்ள அவர், இவ்வாண்டு சமோவாவுக்கு எதிரான தேசிய அணிக்குத் தன் முதல் டி20 ஆட்டத்தை ஆடினார்.

“மழை வந்ததால் போட்டி D/L முறையில் முடிந்துவிடுமோ எனக் கருதி எதிரணியினர் பலமாகப் பந்தடித்தனர். மழையில் பந்தடிப்பதும் சுலபமானது. மழை நின்றபின், பந்து மெதுவாக வரும்போதோ, திசைதிரும்பும்போதோ (cutter) எதிரணியினர் சிரமப்படுவதைக் கண்டேன். அப்படித்தான் இரு விக்கெட்டுகளும் கிடைத்தன,” என்றார் சதீ‌ஷ், 23.

“அணியின் நடுவரிசைப் பந்தடிப்பாளர்கள், குறிப்பாக ராவுல் ‌‌ஷர்மா, சாய் ஹர்‌‌‌ஷா வேணுகோபால் சிறப்பாக ஆடினர். பந்துவீச்சாளர்களில் தாக்‌ஷ் தியாகி, நீல் கார்னிக், அஸ்லான் ஜாஃப்ரி மிகச் சிறப்பாகத் திறன் காட்டினர். வேதாந்த், பிரனவ் சுதர்‌‌ஷன் பந்துவீச்சாளர்களாக ஓரளவுச் சிறப்பாகவே விளையாடினர். சதீ‌ஷ் குறிப்பாகத் தாய்லாந்துக்கு எதிராக மிகச் சிறப்பாக ஆடினார்; பவர்பிளேயிலும் நன்கு பந்தடிப்பதில் முனைப்புக் காட்டினார்,” என்றார் ரெஸ்ஸா.

“முன்பு நாங்கள் வெளிநாட்டு விளையாட்டாளர்களையே நம்பியிருந்தோம். ஆனால் இப்போது உள்ளூரிலேயே நிறைய திறனாளர்கள் இருக்கின்றனர்,” என்றார் சேட்டன்.

சிறப்பாகச் செய்த இளம் விளையாட்டாளர்கள்.
சிறப்பாகச் செய்த இளம் விளையாட்டாளர்கள். - படம்: தாய்லாந்து கிரிக்கெட்

முன்னேற்றத்துக்கான பரிந்துரைகள்

“இன்னும் அதிகக் கிரிக்கெட் போட்டிகளில் மற்ற நாடுகளில் விளையாடினால் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் முன்னேறுவார்கள். விளையாட்டாளர்கள் தேசிய சேவைக்குச் செல்லும்போது, அவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்வதற்கான ஏற்பாடுகளை அவர்களின் முகாம்களிலேயே செய்யலாம். அல்லது உள்ளூர் விளையாட்டுகளுக்கென ‘தேசிய சேவை அணி’ என ஓர் அணியை அமைக்கலாம். வேலை, கல்வி, கிரிக்கெட் மூன்றையும் சமாளிப்பது கடினம். விளையாட்டாளர்கள் இன்னும் அடிக்கடி விளையாட வேண்டும்,” என்றார் சேட்டன்.

அணியைத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயார்ப்படுத்தவே, சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் பாகிஸ்தானிலிருந்து ஓர் அணியை நட்புமுறை ஆட்டத்துக்கு வரவழைத்திருந்தது.

“சங்கம் நல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தது. எனினும், 14-15 நாள்களுக்கு மேலாக மழை வந்ததால் பயிற்சிகளும் தடைபட்டன,” எனக் கூறினார் சேட்டன்.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளைக் கண்ட டேவ் வாட்மோர் போன்ற வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் தம்மை அழைத்து, சிங்கப்பூர் அணி திறன்மிக்கது எனப் பாராட்டியதாகவும் கூறினார் சேட்டன்.

திங்கட்கிழமை (டிசம்பர் 15) முதல் டி10 போட்டிகள் தொடங்கிவிடும். சிங்கப்பூரின் முதல் ஆட்டம், இந்தோனீசியாவுடன். தாய்லாந்து நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி 2 மணி).

அணித் தலைவர் ரெஸ்ஸா சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் திரும்பிவிட்டதால், பந்தடிக்கும் வரிசையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

டி10 அணிக்கு சாய் ஹர்‌‌‌ஷா வேணுகோபால் தலைமைதாங்குவார்.

“நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். சிங்கப்பூர் மக்களை நம் அணி மீது நம்பிக்கை வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் எங்களால் இயன்ற அளவுக்கு முயன்று சிறப்பாக விளையாடுவோம்,” என்றார் தலைமை பயிற்றுவிப்பாளர் அம்ஜாத்.

குறிப்புச் சொற்கள்