பாசிர் பாஞ்சாங் ரோட்டில் கார் ஒன்றை ஓட்டிச் சென்ற முதியவர், குழந்தையுடன் சாலையைக் கடந்துகொண்டிருந்த மாதை மோதினார். அப்போது அந்த மாது தனது இரண்டு வயது மகன் அமர்ந்திருந்த தள்ளுவண்டியுடன் சென்றதால், அது தடம்புரண்டு விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பச்சை விளக்கு எரிந்தபோது அம்மாது சாலையைக் கடக்க முற்பட்டார்.
தாய்க்கும் மகனுக்கும் ஏற்பட்ட காயங்கள் குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்படவில்லை.
சாலையைப் பயன்படுத்தும் பிறர்மீது கவனமின்றி வாகனத்தை ஓட்டி அந்த மாதுக்கும் குழந்தைக்கும் கடுமையான காயம் ஏற்படுத்தியதாகப் புதன்கிழமை (ஏப்ரல் 15) கோ யோங் சியாங் என்ற அந்த 74 வயது முதியவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஹார்பர் டிரைவிலிருந்து வலதுபுறமாக பாசிர் பாஞ்சாங் ரோட்டுக்குள் நுழையுமுன் ஓட்டுநர் போதிய கவனம் செலுத்தாததால் விபத்து நேர்ந்தது என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோவின் வழக்கு மே 13ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.
சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பைக் கவனத்தில்கொள்ளாமல் கடுமையான காயம் விளைவிக்கும் விதமாக வாகனங்களை ஓட்டும் குற்றம் புரிபவர்களுக்கு ஈராண்டுச் சிறை, $5,000 வரையிலான அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

