சிங்கப்பூர் தொடர்ந்து குடிநுழைவுச் சோதனைகளைத் தானியக்கமயமாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கியூஆர் குறியீட்டை அது அறிமுகப்படுத்தியுள்ளது. மைஐசிஏ (MyICA) கைப்பேசியில் உருவாக்கப்படும் கியூஆர் குறியீடு, உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடப்பிதழுக்குப் பதிலாக விரைவாகக் குடிநுழைவுச் சோதனைகளைக் கடந்து செல்ல உதவுகிறது.
இருந்தாலும் இன்னமும் பலர் கடப்பிதழ்களையே நம்பியிருக்கின்றனர்.
அதாவது பேருந்து பயணிகளில் 48 விழுக்காட்டினரும் மோட்டார்சைக்கிளோட்டிகளில் 40 விழுக்காட்டினரும் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்துவதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் வியாழக்கிழமை (டிசம்பர் 18) தெரிவித்தது.
ஆனால் காரில் பயணம் செய்யும் பயணிகளில் 69 விழுக்காட்டினர் புதிய முறையைப் பயன்படுத்துகின்றனர்.
முதியோர், கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்துவது குறைவாக உள்ளது. 51 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிப் பேர் மட்டும் புதிய முறையைப் பயன்படுத்துகின்றனர். இவர்களுடன் ஒப்பிடுகையில் 21 முதல் 50 வயதுடையவர்களில் 70 விழுக்காட்டினர் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்துகின்றனர்.
“பயணிகள் வெளியே வராமல் வாகனத்திலிருந்தே குடிநுழைவுச் சோதனைகளை விரைவாக முடிக்க உதவும் கியூஆர் குறியீட்டை அனைவரும் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்,” என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

