பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அமலாக்கப் பணி தீவிரப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் போக்குவரத்துக் காவல்துறையும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் விதிமீறும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
வேக வரம்பை மீறுவது, சோதனைச்சாவடியில் வரிசையில் காத்திருக்காமல் முந்தியடித்துக்கொண்டு மற்ற வாகனங்களைப் பின்னுக்குத் தள்ளிச் செல்வது போன்ற சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுநர்களை அடையாளம் காணவும் இத்தகைய செயல்களைத் தடுக்கவும் இந்த அமலாக்கப் பணி தீவிரப்படுத்தப்படுகிறது.
இந்தத் தகவலைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 12) ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
விதிமீறும் வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களுக்குச் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்படலாம்.
விதிமீறும் உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்துக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படலாம்.
சோதனைச்சாவடியில் வரிசையில் காத்திருக்காமல் முந்தியடித்துக்கொண்டு மற்ற வாகனங்களைப் பின்னுக்குத் தள்ளிச் செல்லும் வாகனங்கள் மீண்டும் வரிசையில் சேர பணிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் புரியும் அல்லது அதிகாரிகளின் உத்தரவுக்குக் கட்டுப்படாத பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டப்படாது என்று ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. சீனப் பெருநாளும் முஸ்லிம்கள் நோன்பு எடுக்கும் ரமலான் மாதமும் நெருங்கும் வேளையில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
“சாலைத் தடம் தொடர்பான ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்கவும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றவும் தவறும்போது மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாது, மற்ற ஓட்டுநர்களுக்கு அபாயம் ஏற்படுகிறது.
“பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் அமலாக்கப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு பயணிகளைக் கேட்டுக்கொள்கிறோம். நிலம் வழிச் சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தும்போது சாலைத் தட ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பதுடன் சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் பாதுகாப்பான, இனிமையான பயண அனுபவத்தை ஏற்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்,” என்று ஆணையம் கூறியது.

