உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மாணவர்கள் மூவர் தடுத்துவைக்கப்பட்டனர்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மாணவர்கள் மூவர் தடுத்துவைக்கப்பட்டனர்

3 mins read
319120f6-5a01-470f-bc42-aa42df5dff04
உள்துறை அமைச்சின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (ஜூலை 27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் (இடது), கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சிங்கப்பூர் மாணவர்கள் மூவருக்குத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அவர்கள் மூவருக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லையெனினும், மூவரும் இணைய வன்முறை, பயங்கரவாதக் கொள்கைகளின் தாக்கத்தால் தீவிரவாதச் சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டனர் என்றும் சிங்கப்பூரில் தாக்குதல்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திங்கட்கிழமை (ஜூலை 27) தெரிவித்தது.

அவர்களுள் ஆக இளையவர்க்கு வயது 14. கடந்த ஜூன் பள்ளி விடுமுறையின்போது தம் பள்ளியில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள்மீதும் ஆசிரியர்கள்மீதும் கத்திக்[Ϟ]குத்துத் தாக்குதலை நடத்த 21 பக்கத் திட்டத்துடன் அந்த மாணவர் தயாராக இருந்தாரென மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் கூறினார்.

இணைய விளையாட்டான ‘ரோப்லோக்ஸ்’ மூலம் தீவிரவாதச் சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்ட அந்த மாணவரை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மே மாதம் கைதுசெய்தது.

மற்றொரு வழக்கில், 15 வயது மாணவர் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவ்வமைப்பின் கொள்கைகளைப் பரப்புவதற்காகச் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார்.

தாக்குதலுக்காக வீட்டிலேயே வெடிபொருள்கள் தயாரிப்பது குறித்து அவர் ஆராய்ந்ததாகத் திரு சண்முகம் கூறினார்.

மூன்றாவது வழக்கில், டான் ஜூன் ஜியே என்ற 19 வயது உயர்கல்வி நிலைய மாணவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளரானதால், தனது பள்ளியின் ‘எல்ஜிபிடிகியூ’ மாணவர்கள்மீதும் செம்பவாங் ஆகாயப்படைத் தள வீரர்கள்மீதும் கத்திக்குத்துத் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருந்தார். அவர் முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் இணையப்பக்கங்களையும் முடக்கத் திட்டமிட்டிருந்தார்.

“2015ஆம் ஆண்டிலிருந்து 20 வயதிற்குக் குறைந்த இளையர்கள் 23 பேர் மீது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்தது,” என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

“நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக இருப்பதால் இத்தகைய அபாயங்களைத் தடுக்க முடிகிறது. ஆனாலும், நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

“உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை எப்போதும் சரியான நேரத்தில் ஆபத்துகளைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டோர்க்குத் தாக்குதல் நடத்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் போதும்,” என்று அவர் எச்சரித்தார்.

குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் தம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் அத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கும் உரிய அரசாங்க அமைப்புகளுக்கும் தெரிவிக்குமாறு திரு சண்முகம் கேட்டுக்கொண்டார்.

பள்ளிகளில் தொடர்ந்து பாதுகாப்பு முயற்சிகள் அதிகரிக்கப்படும் நிலையில் அவற்றைச் சிறைச்சாலைகளாகவோ தடுப்புக்கூடங்களாகவோ மாற்றுவது சிறப்பன்று என அவர் கூறினார். பள்ளிகள் தொடர்ந்து கற்றலுக்கு ஏற்ற தளங்களாக அமைவது முக்கியமென்று அவர் வலியுறுத்தினார்.

சிறுபான்மையினர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த மலாய்/முஸ்லிம் சமூகத்தைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்றும் திரு சண்முகம் சொன்னார்.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து இணையக் குற்றத் தீங்குத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மூன்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவற்றில் ஒன்று, ஓர் இணையச் சேவை வழங்குநரின் பக்கத்தை முடக்குவது தொடர்பானது; மற்ற இரண்டும் இணையச் சேவை வழங்குநர்களின் பக்கங்களுக்கான அனுமதியைத் தடுப்பதன் தொடர்பிலானவை.

அப்பக்கங்களில் பயங்கரவாதம் சார்ந்த பதிவுகளும் காணொளிகளும் பதிவிடப்பட்டுள்ள நிலையில், அவை சிங்கப்பூர்ப் பயனாளர்களை எட்டாமலிருக்க அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த இணையத்தளங்களும் காணொளிகளும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, துப்பாக்கிச்சூடு, வன்முறை ஆகியவற்றை ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவை பயங்கரவாதிகளைப் போற்றுவதுடன் அவர்களுடன் இணையும்படி பொதுமக்களை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

சிங்கப்பூரில் முன்பு, தீவிரவாதச் சித்தாந்தத்தின்பால் இளையர்கள் ஈர்க்கப்பட்ட சம்பவங்களுக்கும் அப்பக்கங்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இளையர்கள் அந்தத் தளங்களில் உள்ள பதிவுகளைப் பார்த்த பிறகு பயங்கரவாதிகளாக மாறியதுடன் தங்களது தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கு அவற்றிலுள்ள தகவல்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

வன்முறையையும் பயங்கரவாதத்தையும் ஆதரிக்கும் இணையப் பதிவுகளுக்கு அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவிப்பதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

இளையர்களிடையே தீவிரவாதத்தின்பால் ஈர்க்கப்படும் போக்கு அதிகரித்துவருவது வருத்தத்திற்குரியது என்றும் சிங்கப்பூர் மக்களிடையே பயங்கரவாதக் கொள்கைகளைப் பரப்ப முயலும் இணையத்தளங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தீங்கிழைக்கும் இணையப் பதிவுகளிலிருந்து இளையர்களைப் பாதுகாக்க தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுடனும் கல்வி அமைச்சுடனும் இணைந்து உள்துறை அமைச்சு தொடர்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்