அடையாளமும் பாரம்பரியமும் முக்கியம்: இளையர்கள் வலியுறுத்து

தமிழர் திருநாள் விழா 2026

அடையாளமும் பாரம்பரியமும் முக்கியம்: இளையர்கள் வலியுறுத்து

2 mins read
6b99a7d6-f627-4f26-9f97-a0b456b649f7
கலந்துரையாடலில் இளையர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். - படம்: உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
Google News Preferred Icon
சமூக முன்னேற்றத்திற்கான நடைமுறைப் பரிந்துரைகள் கலந்துரையாடலின்போது முன்வைக்கப்பட்டன.
சமூக முன்னேற்றத்திற்கான நடைமுறைப் பரிந்துரைகள் கலந்துரையாடலின்போது முன்வைக்கப்பட்டன. - படம்: உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்

பண்பாடு, சிந்தனை, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை இணைக்கும் உரையாடலுக்கான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்த ‘தமிழர் திருநாள் விழா 2026’ - வட்டமேசை ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை (பிப்ரவரி 28) ‘பிளேக்பாக்ஸ்’ அரங்கில் நடைபெற்றது.

உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், சிங்கப்பூர்த் தமிழர் சமுதாய முகநூல் ஊடகக்குழு (STC), தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம் (TACS), தமிழர் பேரவை கூட்டுறவு நிறுவனம் (TRC Multi-Purpose Cooperative Society) ஆகியவை இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.

கலந்துரையாடலில் பங்கேவற்றவர்கள் சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

1952லிருந்து 1974வரை அமரர் கோ சாரங்கபாணி தமிழர் திருநாளைக் கொண்டாடித் தமிழர்களின் அடையாளத்தையும் ஒற்றுமையையும் தமிழ்மொழி வழி வலுப்படுத்தியதைத் ‘தமிழர் திருநாள் விழா 2026’ ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மா கோவிந்தராசு குறிப்பிட்டார்.

இந்த முயற்சி தமிழ்ச் சமூகத்துக்குள் ஒற்றுமையை வளர்ப்பதோடு சிங்கப்பூரின் பல இன, பல பண்பாட்டுச் சமூகங்களுடன் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

சனிக்கிழமை நடைபெற்ற வட்டமேசை ஆய்வுக்கூட்டத்தில் 12 பேச்சாளர்கள் பங்கேற்றனர். கலந்துரையாடலை வழிநடத்தவும் நிபுணத்துவக் கருத்துகளை வழங்கவும் மூன்று குழு ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

‘நவீனச் சமூகத்தில் தமிழ்ப் பண்பாட்டின் நிலைத்தன்மையும் அதன் அவசியமும்’, ‘இளைஞர் தலைமைத்துவம், அதிகாரமளித்தல்’, ‘சமூக வலையமைப்புகளை வலுப்படுத்துதல்’, ‘தமிழ் மொழியையும் பாரம்பரியத்தையும் நிலைநிறுத்துவதில் கல்வியின் பங்கு’ போன்ற தலைப்புகளில் இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் நீடித்தது.

சமூக முன்னேற்றத்திற்கான நடைமுறைப் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

உலகமயமான சூழலில் தங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டு பண்பாட்டு வேர்களை உறுதியாகப் பேணுவது பற்றி இளையர்கள் பேசினர்.

பெரியவர்களும் குழு ஆலோசகர்களும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதோடு இளையர்கள் முன்வைத்த கருத்துகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினர். வழிகாட்டுதல், ஒற்றுமை, சமூக ஈடுபாடு ஆகியவை முக்கியம் என அவர்கள் வலியுறுத்தினர்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருமதி சரோஜினி பத்மநாதன், சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உரையாடலின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.

“தமிழர் திருநாள் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல; சிந்தனையும் பொறுப்பும் இணையும் ஒரு மேடை. தலைமுறைகள் ஒன்றுகூடி கருத்துகளைப் பகிரும்போது சமூகத்தின் எதிர்காலம் மேலும் வலுப்பெறும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்