மேக்ஸ்வெல் உணவங்காடி கொலை: சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆடவர்

1 mins read
03a504e5-c762-40ae-a40b-0b1e7bdbd415
கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 41 வயது வூ தாவ் (சிவப்பு ஆடை). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேக்ஸ்வெல் உணவங்காடியில் தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியரை கத்தியால் குத்திய சந்தேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) காலை 9 மணிவாக்கில் கொலை நடந்த இடத்திற்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.

கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 41 வயது வூ தாவ் சீனக்குடிமகன். அவர் உணவங்காடியில் உள்ள டாவ் சியாங் ஜு (Dao Xiang Ju) என்னும் கடையில் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினர்.

வூ கடந்த மாதம் 6ஆம் தேதி, இரவு 10.25 மணிக்கும் 10.55 மணிக்கும் இடையே கடையநல்லூர் ஸ்திரீட்டில் உள்ள மேக்ஸ்வெல் உணவங்காடியில் இருக்கும் கடை ஒன்றில் டான் காமொன்வான் எனும் 48 வயது மாதைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

டான் காமொன்வான் தாய்லாந்தைச் சேர்ந்தவர்.

சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான வூ, செப்டம்பர் ஏழாம் தேதி நள்ளிரவுக்கு பின் 1.30 மணி வாக்கில் புக்கிட் மேரா ஈஸ்ட் அக்கம்பக்க காவல்துறை நிலையத்திற்கு சென்றார். அங்கு டானைத் தான் கத்தியால் குத்தியதாக வூ அதிகாரிகளிடம் கூறினார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

வூமீது செப்டம்பர் 8ஆம் தேதி கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்