அக்கம்பக்கப் புதுப்பிப்புக்கு $95 மில்லியன் ஒதுக்கீடு

அக்கம்பக்கப் புதுப்பிப்புக்கு $95 மில்லியன் ஒதுக்கீடு

3 mins read
8bc8f783-e37f-4700-80f4-04e4c828a624
அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்தின் அடுத்த கட்டத்தில் மேம்பாடு காணவிருக்கும் 23 வட்டாரங்களில் ஹவ்காங் சென்ட்ரலும் அடங்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) ‘என்ஆர்பி’ எனப்படும் அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்தின்கீழ் 23 குடியிருப்பு வட்டாரங்களை மேம்படுத்த $95 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 15,600 வீடுகள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ஹவ்காங் சென்ட்ரல், கிளமெண்டி அவென்யூ, பாசிர் ரிஸ் போன்றவையும் அடங்கும்.

மேம்பாட்டுப் பணிகளும் அங்குப் புதிதாக அமையவிருக்கும் வசதிகளும் குடியிருப்பாளர்களின் பரிந்துரைக்கு ஏற்ப அமையும் என்று கூறப்பட்டது.

குடியிருப்பாளர்கள் அமர்வதற்குரிய இடங்கள், உடலுறுதி இடங்கள், மெதுவோட்டப் பாதைகள், மேற்கூரையுடன் கூடிய தொடர்புவழிகள் போன்றவை இவற்றில் அடங்கும்.

‘என்ஆர்பி’ திட்டத்தின் 15வது சுற்று குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்தார். ஜூன் 1ஆம் தேதி கிளமெண்டி டவுன் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

‘என்ஆர்பி’ திட்டம் 2007ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது. கடந்த ஏப்ரல் மாதம் வரை அதன்கீழ், 120 பகுதிகளில் உள்ள 172,000 வீடுகள் பயனடைந்துள்ளன.

இத்திட்டத்தின் முந்தைய 14 சுற்றுகளுக்கு மொத்தம் ஏறக்குறைய 1.5 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டது.

விரைவாக மூப்படையும் சமூகம் என்ற வகையில் கட்டுமானச் சூழலில் மூத்தோரின் தேவைகளை நிறைவேற்ற பல தரப்புகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் லீ கூறினார்.

‘என்ஆர்பி’ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் வருங்காலத் திட்டங்களில் மூத்தோர் தங்களைத் துடிப்புடன் வைத்துக்கொள்ளவும் அக்கம்பக்கக் குடியிருப்புகளில் பாதுகாப்பாக இருக்கவும் உதவக்கூடிய கூடுதல் அம்சங்கள் இடம்பெறும் என்று வீவக, ஜூன் 1ஆம் தேதி கூறியது.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்கு உகந்த, செடி வளர்க்கும் தொட்டிகளைக் கொண்ட சிகிச்சைத் தோட்டங்கள், மூத்தோருக்கான இடங்களை இணைக்கும் உடலுறுதிப் பாதைகள், திசைகாட்டிக் குறிப்புகள் போன்றவற்றை அது சுட்டியது.

அத்துடன், ஏற்கெனவே மேம்பாடு கண்ட ஆனால் தற்போது மூத்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள 20 குடியிருப்பு வட்டாரங்களில் மூத்தோருக்கான அம்சங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இதன் மூலம் அங் மோ கியோ, புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன், தோ பாயோ ஆகிய வட்டாரங்களில் அமைந்துள்ள 21,000க்கும் மேற்பட்ட வீடுகள் பயனடையும் என்றார் அவர்.

நகர மன்றங்கள் பொருள் விலையேற்றம், மனிதவளச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றை எதிர்கொள்வதால் இந்த முறை ‘என்ஆர்பி’ திட்டத்திற்கான ஒதுக்கீடு ஒரு வீட்டுக்கு $6,100ஆக உயர்த்தப்படுகிறது. முன்னர் அது ஒரு வீட்டுக்கு $4,700ஆக இருந்தது.

எனவே, இத்திட்டத்தின்கீழ் இதுவரை இல்லாத அளவிற்கு $95 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

முந்தைய சுற்றுகளின்கீழ் தற்போது மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வட்டாரங்களில் தகுதி பெற்ற திட்டங்களுக்கும் ஒரு வீட்டுக்கு ஒதுக்கப்படும் தொகை $6,100ஆக உயர்த்தப்படும் என்று வீவக கூறியது.

தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ், ஹவ்காங் குடியிருப்பாளர்களுக்கான ‘என்ஆர்பி’ திட்டத்தை ஜூன் 1ஆம் தேதி அறிவித்தார்.

தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் (இடமிருந்து மூன்றாவது), ஹவ்காங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜேக்சன் லாம் (இடமிருந்து நாலாவது) இருவரும் புளோக் 836 ஹவ்காங் சென்ட்ரலில் ஜூன் 1ஆம் தேதி, குடியிருப்பாளர்களுடன் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் (இடமிருந்து மூன்றாவது), ஹவ்காங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜேக்சன் லாம் (இடமிருந்து நாலாவது) இருவரும் புளோக் 836 ஹவ்காங் சென்ட்ரலில் ஜூன் 1ஆம் தேதி, குடியிருப்பாளர்களுடன் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 கிருமிப் பரவலால் கட்டுமானச் செலவு அதிகரித்ததையும் விநியோகச் சங்கிலி இடையூறு உள்ளிட்ட விவகாரங்களையும் சுட்டிய அவர், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பாளர்களுக்குக் கூடுதல் நன்மையளிக்கக்கூடிய பணிகளை மேற்கொள்ள இயலும் என்றார்.

குறிப்புச் சொற்கள்