86,000 கார் பயணிகள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தினர்

86,000 கார் பயணிகள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தினர்

2 mins read
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கடந்த இரண்டு நாள் நிலவரம் குறித்து ‘ஐசிஏ’ தகவல்
f0a6621a-4bc6-4ae3-9aad-671fe841cfff
புதிய திட்டத்தின்கீழ், உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கடப்பிதழைப் பயன்படுத்தாமல் விரைவாக குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்றலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கார் பயணிகள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்றும் வசதியை, கடந்த இரு நாள்களில் 86,000 பேர் பயன்படுத்தியுள்ளனர்.

இரு நாள்களுக்குமான ஒட்டுமொத்த கார் பயணிகளின் எண்ணிக்கையில் இது 46 விழுக்காடு என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ), மார்ச் 21ஆம் தேதி தெரிவித்தது.

புதிய முறை மார்ச் 19ஆம் தேதி நடப்புக்கு வந்தது. அதன் மூலம், பயணிகள் கடப்பிதழைப் பயன்படுத்தாமல், விரைவாக குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்யலாம்.

கடந்த இரு நாள்களில் குழுக்களாக காரில் பயணம் செய்தோர், இந்த நடைமுறை எளிதாகவும் விரைவாகவும் சிக்கலின்றியும் இருந்ததாகக் கூறியதாக ஆணையம் தெரிவித்தது.

மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 4ஆம் தேதி சிங் மிங் விழா ஆகியவற்றை ஒட்டி, நீண்ட வாரயிறுதி விடுமுறை வருவதால் இரு சோதனைச்சாவடிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கார் பயணிகள் கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தும்படி ஆணையம் ஊக்குவித்தது.

அன்றாடம் கிட்டத்தட்ட 400,000 பேர், உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்கின்றனர். பள்ளி, பொது விடுமுறைக் காலங்களில் இந்த எண்ணிக்கை 440,000 வரை அதிகரிப்பதுண்டு.

இந்நிலையில், கூடுதலான கார் பயணிகள் கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தினால், காத்திருப்பு நேரம் 30 விழுக்காட்டுக்குமேல் குறையும் சாத்தியம் உண்டு என்று ஆணையம் கூறியது.

கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தினாலும், பயணிகள் தங்கள் கடப்பிதழைக் கொண்டுவருவது அவசியம். ஜோகூர் பாருவுக்குள் நுழையும்போதும் அங்கிருந்து வெளியேறும்போதும் மலேசிய சுங்கத் துறையினரிடம் கடப்பிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை அது நினைவுபடுத்தியது.

தானியக்க முறையில் பயணிகள் குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்ற உதவும் ‘ஏபிசிஎஸ்’ முறைக்கான முதற்கட்டமாக கியூஆர் குறியீட்டு முறை அமைகிறது. 2026ல் அது துவாஸ் சோதனைச்சாவடியிலும் மறுமேம்பாடு செய்யப்பட்ட உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 2028லும் அது நடப்புக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மலேசியாகியூஆர் குறியீடுகார்உட்லண்ட்ஸ்துவாஸ்சோதனைச்சாவடிகுடிநுழைவு