இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்ற எஸ்ஐஏ முன்னோடி விமானி காலமானார்

இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்ற எஸ்ஐஏ முன்னோடி விமானி காலமானார்

2 mins read
ef3bf6dc-abf8-4500-8003-b92db990c37a
போர் விமானங்கள் முதல் போயிங் பயணிகள் விமானங்கள் வரை 40 ஆண்டுகளாகப் பல்வேறு விமானங்களை விண்ணில் செலுத்திய கேப்டன் ஹோ வெங் டோ தமது 103ஆம் வயதில் காலமானார். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்காற்றிய ‘ஃபிளையிங் டைகர்ஸ்’ என்று அழைக்கப்படும் விமானிகள் குழுவின் உறுப்பினர்கள் பலரும் இயற்கை எய்திய நிலையில், அக்குழுவில் எஞ்சியிருந்த மிகச் சிலரில் ஒருவரான கேப்டன் ஹோ வெங் டோ, ஜனவரி 6ஆம் தேதி காலை காலமானார். அவருக்கு வயது 103.

‘விங்கி’ என்று பாசமாக அழைக்கப்பட்ட கேப்டன் ஹோவின் மறைவு குறித்து அவரது மருமகன் ஜான் ஹோ, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“நம்மில் பலரும் கனவு காணும் வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர்.

“மிகக் கடுமையான, சிறிதும் கணிக்கமுடியாத வாழ்க்கையை வாழ்ந்த முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த அவர், என் தலைமுறையினர் அமைதியான, எளிதான வாழ்க்கையை வாழ மிகவும் தியாகம் செய்தவர்களில் ஒருவர்.

“அவருக்கும் அவரது தலைமுறையைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் மிக்க நன்றி,” என்று அப்பதிவில் ஜான் ஹோ குறிப்பிட்டுள்ளார்.

கேப்டன் ஹோ, 1920ஆம் ஆண்டு ஈப்போவில் பிறந்தவர். ஹாங்காங்கில் அவர் பட்டக்கல்வி பயின்றபோது 1941ஆம் ஆண்டு ஜப்பான், சீனா மீது படையெடுத்தது.

உடனடியாக சீன-அமெரிக்கக் குழுவில் பயிற்சி விமானியாகப் பங்கெடுக்க அவர் விண்ணப்பித்தார். அக்குழுவிற்கு ‘ஃபிளையிங் டைகர்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. அக்குழுவில் இணைந்து அரிசோனாவில் பயிற்சி பெற்ற அவர், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஆக்கிரமித்த சீனப் பகுதிகளில் பி-25 மிச்செல் ரகப் போர் விமானத்தின் விமானியாக வெற்றிகரமாகப் பங்களித்தார்.

1951ல் மலேயன் ஏர்லைன்சில் சேர்ந்த அவர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தோற்றுவிக்கப்பட்டபோது அதன் முதல் தொகுதி விமானிகளில் ஒருவராகப் பங்களித்தார்.

விங்கி என்று செல்லமாக அழைக்கப்பட்ட கேப்டன் ஹோ.
விங்கி என்று செல்லமாக அழைக்கப்பட்ட கேப்டன் ஹோ. - படம்: சாவ்பாவ்

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற்றபோது கேப்டன் ஹோ, எஸ்ஐஏ விமான நிறுவனத்தின் போயிங் 737 விமானப் பிரிவின் தலைமை விமானியாகப் பணிபுரிந்தார்.

2019ல் அவர் தமது வாழ்க்கை வரலாற்றை ‘மெமோயர்ஸ் ஆஃப் எ ஃபிளையிங் டைகர்’ எனும் நூலாக வெளியிட்டார்.

மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், ஜனவரி 6ஆம் தேதி வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பதிவில் கேப்டன் ஹோவிற்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விமானிமுன்னோடி