கீழ்த்தளத்தில் தடுப்பு, விளையாட்டுக்கு கட்டுப்பாடு: நிபுணர்கள் கருத்து

கீழ்த்தளத்தில் தடுப்பு, விளையாட்டுக்கு கட்டுப்பாடு: நிபுணர்கள் கருத்து

2 mins read
eb7a0da6-a7ea-40a0-8b68-221161a09940
சிறுவர்கள் விளையாடும்போது ஏற்படும் இரைச்சல் குறித்து குடியிருப்பாளர்கள் புகார் அளித்தால் நகர மன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

பொது இடங்களைப் பயன்படுத்துவதில் நாம் அதிகக் கட்டுப்பாடுகளை விதிப்பதாக இணையவாசிகள் பலர் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

காற்பந்து விளையாடக்கூடாது என்பதை அறிவுறுத்த, அண்மையில் உட்லண்ட்ஸ் ரிங் ரோட்டின் புளோக் 638 கீழ்த்தளத்தில் செம்பவாங் நகர மன்றம் தற்காலிகத் தடுப்புகள் இட்டது.

விரும்பியபடி விளையாடவும் ஒன்றுகூடவும் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட அடுக்குமாடிக் கட்டடக் கீழ்த்தளத்தில் இவ்வாறு தடுப்புகள் போடும் சூழல் வந்துவிட்டது தொடர்பில் இணையவாசிகள் வெகுவாக விமர்சித்திருந்தனர்.

இவ்வாறு சிறுவர்கள் விளையாடும்போது ஏற்படும் இரைச்சல், பந்து இங்குமங்குமாய் பறக்கும்போது உருவாகும் பாதுகாப்பற்ற சூழல், பந்து படுவதால் சுவர்களில் படியும் அழுக்குக் கறைகள் என்றெல்லாம் குடியிருப்பாளர்கள் புகார் அளித்து வருவதை அடுத்து அந்தந்த நகர மன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், புகார் தருவதில் உன்னிப்பாக இருக்கும் சிங்கப்பூரர்கள், சகிப்புத்தன்மையை மெல்ல இழப்பதாகச் சிலர் குறைகூறியுள்ளனர்.

இதற்கிடையே, சமூகப் பிணைப்புக்குக் கட்டடக் கீழ்த்தளம் போன்ற பொது இடங்கள் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காற்பந்து விளையாட, அல்லது இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமைந்த இந்த இடங்களும் வாய்ப்புகளும் குறையவில்லை என்றும் கூறப்படுகிறது.

உடலுறுதி வசதிகளைக் கொண்ட பகுதிகள், திறந்த திடல்கள், கூடைப்பந்து விளையாட்டுக் கூடங்கள் போன்ற இடங்களால் கலந்துறவாடல்களும் சந்திப்புகளும் நிகழ முடிவதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற ஆய்வுப் பிரிவில் உதவிப் பேராசிரியராக உள்ள டாக்டர் எய்டன் வோங் கூறினார்.

அதேவேளை, பதிவுசெய்த பிறகு வசதிகளைப் பயன்படுத்தும் முறையால் சிறுவர்கள் விரும்பிய நேரத்தில் விளையாட முடியாமல் கட்டுப்படுத்தப்படுவதை உணரலாம் என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் லாவண்யா கதிரவேலு.

சமூகத்தின் தேவைகளைக் காட்டிலும் தன்னலம், தன் வசதி ஆகியவற்றில் மக்கள் அதிகம் அக்கறை காட்டுகிறார்கள் என்றார் அவர்.

பொது வீடமைப்பில் நாம் அத்தியாவசியமாகக் கருதுவது என்ன என்பதை நினைத்துப் பார்த்து அதற்கேற்ப கட்டடம் எழுப்புவதில் கூடுதல் முயற்சி வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்