பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவர்க்கான சிறப்பு உடற்பயிற்சிக் கூடம்

பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவர்க்கான சிறப்பு உடற்பயிற்சிக் கூடம்

2 mins read
6c67ce18-ce5b-49b6-b1a2-6d826fd36f77
பக்கவாதப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த திரு எட்மண்ட் போ (இடது) பயற்சி செய்வதை பயிற்றுவிப்பாளர் ரியோஷெரா லிம் கண்காணிக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிங்கப்பூரின் முதல் சிறப்பு உடற்பயிற்சிக் கூடமான ‘எஸ்3 சம்மிட்’ (S3 Summit) அங் மோ கியோ ஹப் வணிக வளாகத்தின் நான்காம் தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய ஆய்வு அறக்கட்டளையின் தலைவரும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் (எஸ்ஐடி) தலைவருமான ஹெங் சுவீ கியட் புதன்கிழமை (ஜூலை 29) உடற்பயிற்சிக் கூடத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.

பக்கவாதம் பாதிப்பிலிருந்து மீண்டவரான திரு ஹெங், மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகும் தொடர் பயிற்சிகளும் சமூக ஆதரவும் அவசியம் என்று கூறினார்.

பக்கவாதத்திலிருந்து மீள்வது வாழ்நாள் முழுமைக்குமான ஒரு பயணமாகும்; அது மருத்துவக் கவனிப்பை மட்டும் சார்ந்திருக்காமல், குடும்பத்தினர், நண்பர்கள், பரந்த சமூகத்தின் ஆதரவையும் பொறுத்திருக்கிறது என்றார் அவர்.

பக்கவாதம் ஏற்பட்டு மீண்டவர்கள் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கவும், உடல்நலத்தை மீட்டெடுக்கவும் சிறப்பு மறுவாழ்வுச் சிகிச்சை, சமூக ஆதரவுத் திட்டங்கள் போன்ற சிறப்பு வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன.

இத்தகைய சிறப்பு உடற்பயிற்சிக்கூடம், மருத்துவ மறுவாழ்விற்கும் நீண்டகால மீட்சிக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, அவர்களைத் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கச் செய்ய உதவுகிறது என்று திரு ஹெங் கூறினார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிங்கப்பூரின் முதல் சிறப்பு உடற்பயிற்சிக் கூடத்தின் திறப்புவிழாவில் புதன்கிழமை (ஜூலை 29) பங்கேற்ற திரு ஹெங் சுவீ கியட் உடற்பயிற்சிக் கருவியை இயக்கிப் பார்க்கிறார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிங்கப்பூரின் முதல் சிறப்பு உடற்பயிற்சிக் கூடத்தின் திறப்புவிழாவில் புதன்கிழமை (ஜூலை 29) பங்கேற்ற திரு ஹெங் சுவீ கியட் உடற்பயிற்சிக் கருவியை இயக்கிப் பார்க்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோரின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களும் நேரடியாக உடற்பயிற்சி செய்யக்கூடிய சிறப்பு வசதிகள் இக்கூடத்தில் உள்ளன.

பக்கவாதம் தொடர்பான பயிற்சி பெற்ற ஐந்து பயிற்றுநர்களும் மூத்த உடலியக்கச் சிகிச்சை நிபுணர் ஒருவரும் ஒரே நேரத்தில் 40 பேருக்குப் பயிற்சியளிப்பர்.

‘லியன் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் $1.5 மில்லியன் நிதி ஆதரவில் உருவாக்கப்பட்டுள்ள இக்கூடம், அடுத்த ஐந்தாண்டுகளில் 1,200 பேருக்குப் பயிற்சியளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் பெரியவர்களிடையே ஊனத்தை ஏற்படுத்தும் முக்கியக் காரணியாகவும் உயிரிழப்பிற்கு நான்காவது முக்கியக் காரணியாகவும் பக்கவாதம் விளங்குகிறது. 50 வயதிற்குக் குறைவான இளையர்களிடையேயும் இதன் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வரும் சூழலில், நீண்டகால மீட்சிக்கு இக்கூடம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்