தென்கிழக்காசியக் குத்துச்சண்டையில் தனி‌‌‌ஷா மதியழகனுக்கு வெண்கலம்

2 mins read
f6fe8b86-35ad-4bf9-b8af-5b342f46fd0a
தென்கிழக்காசியாவின் குத்துச்சண்டைப் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை (இடது) தனி‌‌‌ஷா மதியழகனுக்குக் கிடைக்கவிருந்த தங்கப் பதக்கம் நூலிழையில் கைவிட்டுப்போனது. - படம்: ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர்

தென்கிழக்காசியாவின் குத்துச்சண்டைப் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை தனி‌‌‌ஷா மதியழகனுக்குக் கிடைக்கவிருந்த தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான தருணம் நூலிழையில் கைவிட்டுப்போனது.

48 கிலோகிராம் எடையுள்ள பெண்களுக்கான அரையிறுதிச் சுற்றில் வெண்கலத்துடன் வெளியேறினார் தனி‌‌‌ஷா.

தாய்லாந்தின் திப்சாட்சா யோத்வாரியுடன் டிசம்பர் 16ஆம் தேதி பொருதிய தனி‌‌‌ஷா இறுதிச்சுற்றுக்கு முன்னேற அனைத்துவிதத்திலும் போராடியதாக நம்பினார்.

ஆனால் அரையிறுதிச் சுற்றின் இறுதியில் தாய்லாந்துக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியதை அடுத்து தனி‌‌‌ஷாவுக்குப் பதிலாக திசாட்சா இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

28 வயது தனி‌‌‌ஷாவுக்கு அந்த முடிவு பெருத்த ஏமாற்றமாக இருந்தாலும் சிங்கப்பூரின் குத்துச்சண்டை துறைக்குத் தம்மால் முடிந்ததைச் செய்ய முடிந்ததை எண்ணி அவர் திருப்தியடைவதாகக் கூறினார்.

1976ஆம் ஆண்டிலிருந்து இடம்பெறும் ஆசியான் விளையாட்டுகளில் 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரைப் பிரதிநிதித்து குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய முதல் வீராங்கனை என்ற பெருமையைச் சாதித்தவர் தனி‌‌‌ஷா.

குத்துச்சண்டைத் துறையில் தொடர்ந்து பல சாதனைகளைக் குவிக்கவேண்டும் என்ற தனி‌‌‌ஷாவின் உத்வேகம் குறையவில்லை.

குத்துச்சண்டைப் பயிற்சியைச் சிறிதேனும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக நான்காண்டு மருத்துவமனை கல்விக்குப் பதிலாகப் பகுதிநேரமாக மாண்டோரின் உடலைப் பதப்படுத்தும் வேலையை மேற்கொண்டார்.

“எனது இலக்குத் தங்கப் பதக்கம்தான். வெண்கலம் கிடைத்தாலும் பரவாயில்லை. பதக்கத்தின் நிறத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை,” என்றார் தனி‌‌‌ஷா.

எனினும், அதிகமான எதிர்பார்ப்பு தம்மீது இருந்ததால் ஒருவித நெருக்குதலுக்கு ஆளானதுபோல இருந்ததாகத் தனி‌‌‌ஷா தெரிவித்தார். அதை முன்னிட்டு விளையாட்டுத் துறை மனநல ஆலோசகர்களுடன் இணைந்து செயலாற்றியது கவனம் சிதறாமல் இருக்க தமக்கு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தமக்குக் கிடைத்த அனுபவம் ஆசிய விளையாட்டுகள், காமன்வெல்த் விளையாட்டுகள் போன்ற பெரிய இலக்குகளை எட்ட தமக்கு நிச்சயம் உதவும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் தனி‌‌‌ஷா.

குறிப்புச் சொற்கள்