திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தைக் கட்டிக்காக்க சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உடன்பாடு

திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தைக் கட்டிக்காக்க சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உடன்பாடு

2 mins read
0dd56298-862c-4806-996b-e2a3dc3048e0
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிசும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் சட்டபூர்வ உடன்பாட்டைச் செய்துகொண்டனர். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் இருநாடுகளுக்கும் இடையே தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்யும் சட்டபூர்வ உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் உள்ளிட்டவை அவற்றுள் அடங்கும்.

பிரதமர் லாரன்ஸ் வோங்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிசும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) இஸ்தானாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் உடன்பாடு குறித்து அறிவித்தனர்.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிசும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் தடையற்ற எரிபொருள் விநியோகம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினர்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனிசும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் தடையற்ற எரிபொருள் விநியோகம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினர். - படம்: சாவ்பாவ்

“சட்டபூர்வமான உடன்பாடு இன்றைய நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மட்டுமல்ல. நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கையான விநியோகத் தொடர்களும் அதன் மூலம் உருவாக்கப்படும்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் மின்சார உற்பத்தியின் முக்கிய மூலப் பொருள்களில் ஒன்று திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு. சிங்கப்பூருக்குத் தேவையான மூன்றில் ஒரு பங்குத் திரவ இயற்கை எரிவாயுவை ஆஸ்திரேலியா விநியோகம் செய்கிறது.

சிங்கப்பூருக்குத் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைத் தொடர்ந்து விநியோகம் செய்வதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருப்பதை முன்னிட்டு அதிகாரத்துவப் பயணமாகச் சிங்கப்பூர் வந்துள்ள திரு அல்பனிசுக்குத் திரு வோங் நன்றி கூறினார்.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவுக்குத் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை விநியோகம் செய்யும் என்று திரு வோங் வாக்குறுதியளித்தார்.

சிங்கப்பூரையும் அதன் விநியோகத் தொடர்களையும் பாதிக்கக்கூடிய வெளிப்புற இடையூறுகளை சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் துரிதமாகச் சமாளிக்க நெருக்கமாகச் செயல்படும் என்று பிரதமர் வோங் கூறினார்.

வர்த்தக ரீதியான பொதுச் சவால்களைக் கையாள இருதரப்பும் எரிசக்தித் தொடர்பான அமைச்சர்நிலை கலந்துரையாடலை ஏற்பாடு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

நிச்சயமற்ற, நிலையற்ற இத்தகைய காலகட்டத்தில் பங்காளித்துவ உறவுகள் மிகவும் முக்கியமானவை என்று திரு வோங் வலியுறுத்தினார்.

ஆஸ்திரேலியாவின் எரிபொருள் தேவைகளில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு சிங்கப்பூரின் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து செல்வதாகக் கூறிய பிரதமர் வோங், சிங்கப்பூரின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தேவையில் கிட்டத்தட்ட 32 விழுக்காட்டை ஆஸ்திரேலியா விநியோகம் செய்வதாகக் கூறினார்.

இதற்கிடையே, ஜூரோங் தீவுக்குச் சென்ற திரு அல்பனிஸ், சிங்கப்பூரின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுக் கூட்டுறவு நிறுவனம், சிங்கப்பூர் சுத்திகரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகளைச் சந்தித்தார்.

(இடக்கோடி) ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனிசிடம் ஜூரோங் தீவின் ஆலை குறித்து சிங்கப்பூர் திரவ இயற்கை எரிவாயு தலைமை நிர்வாக அதிகாரி லியோங் வெய் ஹுவாங் விவரிக்கிறார்.
(இடக்கோடி) ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனிசிடம் ஜூரோங் தீவின் ஆலை குறித்து சிங்கப்பூர் திரவ இயற்கை எரிவாயு தலைமை நிர்வாக அதிகாரி லியோங் வெய் ஹுவாங் விவரிக்கிறார். - படம்: இபிஏ

மத்திய கிழக்கு மோதலால் ஒவ்வொரு நாடும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய திரு அல்பனிஸ், எரிசக்திப் பாதுகாப்பில் வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் சொந்த நாட்டின் எரிபொருள் பாதுகாப்பையும் பொருளியலையும் வலுப்படுத்துவதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்