வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை விலைகள் இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 0.1 விழுக்காடு குறைந்தன. அதிகமான வீடுகள் விற்கப்பட்டபோதிலும் விலை சற்று சரிந்தது.
கடந்த ஏழாண்டுகளில் பதிவான முதல் இறக்கம் இது. இதற்கு முன்னர் 2019 இரண்டாம் காலாண்டில் மறுவிற்பனை வீடுகளின் விலைகள் குறைந்தன.
2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தக் குறைவான விலை நிலவரம் தெரியவந்தது.
அதுகுறித்து வீவக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) காலை அறிக்கை வெளியிட்டது. தொடர்ச்சியாக, கடந்த ஐந்து காலாண்டுகளில் விலைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இன்றி அல்லது மெதுவான வளர்ச்சி பதிவான நிலையில் தற்போது சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக வீவக அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.
இம்மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட முன்னோடி மதிப்பீடுகளிலும் 0.1 விழுக்காடு குறைவான விலைகள் இடம்பெற்றிருந்தன. உண்மை நிலவரம் அதனை ஒத்து இருக்கிறது.
ஆண்டின் முதலாம் காலாண்டில் 6,285 வீடுகள் விற்கப்பட்டன. இது 2025 நாலாம் காலாண்டில் விற்கப்பட்ட 5,256 வீடுகளைக் காட்டிலும் அதிகம்.
இருப்பினும், ஆண்டுக்கு ஆண்டு என்னும் அடிப்படையில் 2025 முதலாம் காலாண்டைக் காட்டிலும் மார்ச் வரையிலான இந்தக் காலாண்டில் 4.6 விழுக்காட்டு வீடுகள் குறைவாக விற்கப்பட்டன.
அந்த நிலவரத்தைக் குறிப்பிட்டு, ‘ரியலைன் குரூப்’ நிறுவனத்தின் தலைமைப் பகுப்பாய்வாளரும் உத்தி வகுப்பாளருமான கிறிஸ்டின் சன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆண்டுக்காண்டு வீழ்ச்சியடையும் நிலவரம் இவ்வாண்டு மறுவிற்பனைச் சந்தை பொதுவாக மெதுவடைவதையே உணர்த்துகிறது என்றார் அவர்.
இந்நிலையில், 2026 ஜூன் மாதம் 6,900 தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகள் (பிடிஓ) விற்பனைக்கு விடப்படும். அங் மோ கியோ, பீஷான், புக்கிட் மேரா, செம்பவாங் மற்றும் உட்லண்ட்ஸ் வட்டாரங்களில் அதற்கான திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.
அந்த பிடிஓ வீடுகளை வாங்க ஜூன் மாத விற்பனை நடவடிக்கையில் பங்கேற்க விரும்புவோர் வீவக வீட்டுத் தகுதிக் கடிதத்தை மே 15க்குள் பெற்றுவிடுமாறு வீவக தெரிவித்துள்ளது.
இவ்வாண்டில் 19,600 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாகக் கடந்த பிப்ரவரி மாதம் 4,692 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.
பிப்ரவரி, ஜூன் மாத விற்பனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் இவ்வாண்டின் மூன்றாவது, இறுதி பிடிஓ வீட்டு விற்பனைத் திட்டம் அக்டோபரில் இடம்பெறும். அப்போது, கிட்டத்தட்ட 8,000 வீடுகள் விற்பனைக்கு விடப்படும். 1,600 வீடுகளைக் கொண்ட ‘தோ பாயோ வெஸ்ட்’ பிடிஓ திட்டத்திற்குட்பட்ட 1,000க்கும் மேற்பட்ட வீடுகளும் அந்த எண்ணிக்கையில் அடங்கும்.

