வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) கார் நிறுத்துமிடங்களில் வணிக வாகனங்களை நிறுத்துவதற்கான மாதாந்தரக் கட்டணம் குறைக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து வீவக கார் நிறுத்துமிடங்களைப் பயன்படுத்துவதற்கு வணிக வாகன உரிமையாளர்கள் ஒவ்வொரு மாதமும் $80 கட்டணம் செலுத்தவேண்டும். தற்போது அந்தக் கட்டணம் $110ஆக உள்ளது.
வணிக வாகனங்களின் எடை 1,801 கிலோகிராமிலிருந்து 2,000 கிலோகிராமுக்கு இடைப்பட்டிருக்கவேண்டும்.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் கார் நிறுத்துமிடங்களுக்கான மாதாந்தரக் கட்டணங்களும் குறைக்கப்படுவதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் திங்கட்கிழமை (ஜூன் 8) ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்தார்.
ஆணையத்தின் கார் நிறுத்துமிடங்களுக்கான மாதாந்தரக் கட்டணம் $90க்குக் குறைகிறது. இந்தப் புதிய மாற்றம் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். தற்போது ஆணையத்தின் கார் நிறுத்துமிடங்களுக்கான கட்டணம் $120லிருந்து $160க்கு இடைப்பட்டிருக்கிறது.
கட்டண மாற்றங்கள் மூலம் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 2,000 வாகன ஓட்டுநர்கள் பயனடைவர் என்று திரு சீ குறிப்பிட்டார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் கட்டண மாற்றங்கள் குறித்து தெரிவிக்க வாகன உரிமையாளர்களுக்குக் கடிதங்கள் அனுப்பும் என்றும் அவர் கூறினார்.

