சிங்கப்பூர் உணவு அமைப்பும் தொற்றுநோய் தடுப்பு நிலையமும் மேலும் இரண்டு வகைப் பால்மாவுகள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அந்த மாவுகளில் செரியுலிட் (cereulide) என்ற நச்சு கண்டறியப்பட்டுள்ளதாக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மருத்துவர்களிடம் ஆலோசனைகள் நடத்தி நச்சினால் குழந்தைகள் யாரேனும் பாதிப்படைந்துள்ளனரா என்பதை அறிய சிங்கப்பூர் உணவு அமைப்புடன் (எஸ்எஃப்ஏ) தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் (சிடிஏ) ஒருங்கிணைந்து பணியாற்றிவருகிறது.
பிறந்த குழந்தைகளுக்கான 800 கிராம் எடையுள்ள ‘நெஸ்லெ’ (Nestle NAN HA2) பால்மாவு வகை சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண் 52750017C1 கொண்டது. அதன் பயன்பாடு 2027ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி காலாவதியாகும்.
ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண் 326251110 கொண்ட பால்மாவு ‘நேச்சர் ஒன் டெய்ரி ஆர்கானிக் பிரீமியம் டாட்லர் மில்க் ஃபார்முலா’ (Nature One Dairy Organic Premium Toddler Milk Formula) என்ற பிறந்த குழந்தைகளுக்கான (Stage 3) மாவுவகை 900 கிராம் எடையுள்ளது. அதன் காலாவதி 2027ஆம் ஆண்டு நவம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளாகும்.
அவற்றை மீட்கும் பணிகள் தொடர்வதாக அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
“கடந்த ஜனவரி 30ஆம் தேதி கடைசியாக நாங்கள் அறிவித்த விவரங்களில் பால் அருந்தியதால் லேசான அறிகுறிகளுடன் நச்சு பாதித்ததாக மேலும் புதிய பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்பதை உறுதிசெய்கிறோம். அதற்கு முன்பாக நடந்த மூன்று சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணமடைந்துவிட்டன,” என்று அமைப்புகள் தெரிவித்துள்ளன.
குறிப்பிடப்பட்டுள்ள பால்மாவுகளை வாங்கியோர் குழந்தைகளுக்கு அவற்றைப் புகட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவற்றை ஏற்கெனவே உட்கொண்டு குழந்தைகள் பாதிப்படைந்திருந்தால் உடனடியாக மருத்துவரை நாடும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

