சிங்கப்பூரில் இடைவிடாது பெய்துவரும் தொடர்மழையால் வெப்பநிலை 21 டிகிரி செல்சியசுக்குக் குறைந்தது.
பிப்ரவரி 19ஆம் தேதி நிலவரப்படி, கிளமெண்டி, நியூட்டன், ஜூரோங் ஆகிய வட்டாரங்களில் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் வரை சரிந்தது.
அதேபோல், ஜூரோங் வெஸ்ட்டிலும் செந்தோசா தீவிலும் வெப்பநிலை கிட்டத்தட்ட 21 டிகிரி செல்சியசாகப் பதிவானது எனச் சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் நிலவும் அசாதாரண வானிலை குறித்த புகைப்படங்களையும் காணொளிகளையும் இணையவாசிகள் சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
பொதுவாக டிசம்பர் முதல் மார்ச் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நீண்ட நேரத் தொடர் மழையின்போது மூடு பனி போன்ற மேக மூட்டத்தை அடிக்கடி காண முடியும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
பிப்ரவரி 19ஆம் தேதி, பிற்பகல் வேளையிலிருந்து மாலை வரை சிங்கப்பூர் முழுவதும் மழை பெய்தது. தீவின் மத்தியப் பகுதிகளில் உள்ள வட்டாரங்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பதிவான மழை அளவை நிலையம் பதிவுசெய்துள்ளது.
மேலும், ஜூரோங், பயனியர், புக்கிட் தீமா ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுப் பயனீட்டுக் கழகம் பிப்ரவரி 19ஆம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தது.
பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பகுதியில் குறிப்பிட்ட சில நாள்களில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல், மாலை வேளைகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பிப்ரவரி 16ஆம் தேதி நிலையம் வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அதைத் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவும் என்றாலும், ஒருசில நாள்களில் பிற்பகல் வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அதில் நிலையம் குறிப்பிட்டது.

