தான்சானியாவுக்கு அதிபர் தர்மன் அரசுமுறைப் பயணம்

தான்சானியாவுக்கு அதிபர் தர்மன் அரசுமுறைப் பயணம்

2 mins read
162316b7-e71e-414b-bfcc-22484bdca93e
சிங்கப்பூருக்கும் தான்சானியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 45ஆம் ஆண்டு நிறைவையொட்டி விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அங்குச் செல்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஜூன் 8 முதல் 10 வரை தான்சானியாவில் இருப்பார்.

அந்தக் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டுக்கு சிங்கப்பூரின் அதிபர் ஒருவர் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.

சிங்கப்பூருக்கும் தான்சானியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 45ஆம் ஆண்டு நிறைவையொட்டி தான்சானிய அதிபர் சாமியா சுலுஹு ஹசன் அழைப்பின் பேரில் அதிபர் தர்மன் அங்குச் செல்வதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு ஜூன் 1ஆம் தேதி தெரிவித்தது.

தான்சானிய அரசாங்க வரவேற்புச் சடங்கில் பங்கேற்கும் திரு தர்மன், பெருநகரான டார் எஸ் சலாமில் அந்நாட்டின் அதிபரைச் சந்திப்பார். அங்கு அவருக்கு அரச விருந்து அளிக்கப்படும்.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக ஊடகச் செய்தியாளர்களைச் சந்திப்பர். இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு உடன்பாடுகள் கையெழுத்தாவதை அவ்விருவரும் பார்வையிடுவர்.

அதிபர் தர்மன் மேற்கொள்ளும் பயணத்தின்போது கையெழுத்தாகவிருக்கும் உடன்பாடுகள் கரிம வர்த்தக உதவிகள், திறன் மேம்பாடு, ஆற்றல் வளர்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி போன்றவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டார் எஸ் சலாமில் உள்ள பல்கலைக்கழகத்தைப் பார்வையிடும் அவர், அங்கு சொற்பொழிவு நிகழ்த்துவார்.

சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பு தான்சானியாவுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் சிங்கப்பூர்-தான்சானியா வர்த்தக வட்டமேசைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

இருதரப்பு வர்த்தகத் தலைவர்களும் தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்புகளைக் கண்டறியவும் வர்த்தகக் கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் அந்தக் கூட்டம் உதவும்.

வேகமாக வளர்ச்சி கண்டுவரும் உலகின் இரண்டாவது வட்டாரமான ஆப்பிரிக்காவில் உறவுகளை மேம்படுத்த சிங்கப்பூர் முயன்று வரும் வேளையில் அதிபர் தர்மனின் தான்சானிய வருகை அமைய உள்ளது.

2025 நவம்பரில் பிரதமர் லாரன்ஸ் வோங் எத்தியோப்பியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் சிங்கப்பூரின் தூதரகம் திறக்கப்படும் என்று அப்போது அவர் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்