அதிபர், பிரதமர் புத்தாண்டு வாழ்த்து

அதிபர், பிரதமர் புத்தாண்டு வாழ்த்து

2 mins read
4e11b1ab-3c23-43de-8169-bc2adffa7254
‘இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என்று தமிழிலேயே தமது வாழ்த்துச் செய்தியைத் தொடங்கியுள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

புத்தாண்டு கொண்டாடும் தமிழர்கள், சீக்கியர்கள், மலையாளிகள், வங்காளிகள் உள்ளிட்ட சிங்கப்பூரிலுள்ள இந்தியச் சமூகத்தினர் அனைவர்க்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிபருக்குப் பிடித்த காய்கறி பிரியாணி

“பிரியாணியைப் பிடிக்காதவர்கள் எவரேனும் உண்டா?” என்று ஃபேஸ்புக் வழியாகப் பதிவிட்டுள்ள தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுள்ளார் அதிபர் தர்மன்.

“யாருக்கேனும் பிரியாணி பிடிக்காமல் இருக்குமா? இன்று அது மிகச் சிறந்த இந்திய உணவாகக் கருதப்பட்டாலும், அதனைச் சுவைக்க இனம், சமயம் அல்லது பண்பாடு ஒரு தடையாக இராது.

“என்னைப் போல மாட்டிறைச்சியைத் தவிர்ப்பவர்கள் என்றாலும், கோழி பிரியாணி, ஆட்டிறைச்சி பிரியாணி, கடலுணவு பிரியாணி என எப்போதும் புகழ்பெற்ற பல தெரிவுகள் உண்டு.

“இப்போதெல்லாம் எனது தெரிவு காய்கறி பிரியாணிதான். அதில் இறைச்சிக்கு மாற்றாக, மெல்லுவதற்கு ஏதுவான ஈரப்பலாக்காய் சேர்க்கப்படுகிறது. இந்தியாவிலும் இது நலமிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த தெரிவாகப் புகழ்பெற்று வருகிறது,” என்று அதிபர் விளக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

சிராங்கூன் சாலையிலுள்ள ‘பொடி & பொரியல்’ உணவகத்தின் ஈரப்பலாக்காய் சேர்க்கப்பட்ட சைவ பிரியாணியைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பகிர்ந்துள்ளார்.
சிராங்கூன் சாலையிலுள்ள ‘பொடி & பொரியல்’ உணவகத்தின் ஈரப்பலாக்காய் சேர்க்கப்பட்ட சைவ பிரியாணியைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பகிர்ந்துள்ளார். - படம்: அதிபர் அலுவலகம்

பல்வேறு நிலப்பரப்புகளையும் பண்பாடுகளையும் கடந்து வந்த ஓர் உணவிற்கு பிரியாணி மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அதுபோல, தென்கிழக்காசியாவும் இந்த உணவிற்குத் தனக்கேற்றாற்போலப் புதிய மெருகூட்டியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலுள்ள ‘நாசி பிரியாணி’, வழக்கமாக அச்சார் (காய்கறி ஊறுகாய்கள்) அல்லது சமைத்த அன்னாசிப் பழத் துண்டுகள் மற்றும் தால்ச்சாவுடன் (பருப்புக் குழம்பு) பரிமாறப்படுகிறது. இந்தோனீசியாவில், தேங்காய்ப்பால் மற்றும் உள்ளூர் மசாலாப் பொருள்களின் மணம் இதில் தூக்கலாக இருக்கும்,” என்று அதிபர் தர்மன் தெரிவித்துள்ளார்.

தமிழில் தொடங்கிய பிரதமர்

‘இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என்று தமது வாழ்த்துச் செய்தியைத் தொடங்கியுள்ளார் பிரதமர் வோங்.

“தமிழர்கள் இன்று (ஏப்ரல் 14) புத்தாண்டுக் கொண்டாட்டங்களுடன் புதிய ஆண்டைத் தொடங்குகின்றனர்; சீக்கியர்கள் வைசாக்கி திருநாளைக் கொண்டாடுகின்றனர். இதே நாளில், மலையாளிகள் விஷு பண்டிகையை வரவேற்கின்றனர்.

“அதுபோல, மற்றச் சமூகத்தினரும் தத்தம் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்,” என்று திரு வோங் தமது இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

“வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டாலும் புதுப்பிப்பு, புதிய தொடக்கம் எனும் பொதுவான உணர்வுகளை அவை பகிர்ந்துகொள்கின்றன - இது நம் அனைவர்க்குமான சிங்கப்பூர் எனும் இல்லத்தை வடிவமைக்கும் செழுமையான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

“மிகவும் பிளவுபட்டுள்ள இவ்வுலகில், இத்தகைய தருணங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அவை நம்மை ஒன்றிணைப்பதுடன், ஒரே மக்களாக நம்மைப் பிணைத்துள்ள உறவுகளையும் வலுப்படுத்துகின்றன,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், “சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் வைசாக்கி, சிங்களப் புத்தாண்டு விழாக்களைக் கொண்டாடும் சிங்கைவாழ் அன்பர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“உலகில் பல சவால்களை சந்திக்கும் நாம், என்றும் ஒற்றுமையாக அரசாங்கத்துடன் இணைந்து அந்தச் சவால்களை வெற்றியுடன் எதிர்நோக்குவோம்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்