துணைப் பாதுகாப்புத் திட்டத்துக்குப் புதிய நிபந்தனை: தனியார் காப்புறுதி நிறுவனங்கள் ஆதரவு

2 mins read
2c57aa09-25e6-4bbf-a05c-4842017848e1
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘ரைடர்’ எனப்படும் துணைப் பாதுகாப்புத் திட்டத்துக்கான புதிய நிபந்தனைகளின்படி நோயாளிகள் தங்களுக்கான மருத்துவக் கட்டணங்களின் பெரும்பகுதியை அவர்களே செலுத்துவர். அதைச் சுகாதாரக் காப்புறுதித் திட்டங்களை வழங்கும் தனியார் நிறுவனங்கள் ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ல் புதிய துணைப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு (சமமான அல்லது குறைவான அனுகூலங்களுடன் கூடியவை) மாறிக்கொள்ள விரும்புவோர், தங்கள் அபாயத்தைக் காப்புறுதி நிறுவனங்கள் மதிப்பிடுவதற்கான கூடுதல் செயல்முறையின்றி (additional underwriting) அத்திட்டங்களுக்கு மாறிக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனங்கள் கூறுகின்றன.

2026 ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து விற்கப்படும் புதிய துணைப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டு, அவை அங்கம் வகிக்கும் காப்புறுதித் திட்டங்கள் நடப்புக்கு வருவதற்கு முன்பு குறைந்தபட்சக் கட்டணங்களைச் செலுத்தப் பயன்படுத்த முடியாது. புதன்கிழமை (நவம்பர் 26) சுகாதார அமைச்சு இதனை அறிவித்தது.

மேலும், புதிய துணைப் பாதுகாப்புத் திட்டத்தை எடுப்போர் தங்களின் கட்டணத்தில் கூடுதல் பகுதியைத் தாங்களே செலுத்தவேண்டும். இணைக்கட்டண முறையின்படி உச்சவரம்புத் தொகை 6,000 வெள்ளிக்கு இரட்டிப்பாக்கப்படுவது இதற்குக் காரணம்.

புதிய துணைப் பாதுகாப்புத் திட்டத்துக்கான கட்டணம் பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது வரும்போது நோயாளிகளால் சமாளிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர், காப்புறுதித் துறை, சுகாதார அமைச்சின் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறினார். ஆயுள் காப்புறுதிச் சங்கம், ஆயுள் காப்புறுதித் திட்டங்கள், ஆயுள் மறுகாப்புறுதித் திட்டங்கள் (reinsurance providers) ஆகியவற்றை வழங்கும் நிறுவனங்களுக்கான வர்த்தகச் சங்கமாகும்.

கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் பேச்சாளர், தற்போது துணைப் பாதுகாப்புத் திட்டங்களை வைத்திருப்போர் அவற்றுக்கான அனுகூலங்களைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று தெரிவித்தார்.

தங்களின் எச்எஸ்பிசிலைஃப், தங்களின் துணைப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடர்ந்து ஆராயப்போவதாகவும் மாற்றங்கள் இருந்தால் அவற்றைப் பற்றித் தாங்கள் தெரியப்படுத்தவிருப்பதாகவும் கூறியது.

குறிப்புச் சொற்கள்