கவிஞர், தமிழ்ச்சமூக ஆர்வலர் மா. அன்பழகன் காலமானார்

கவிஞர், தமிழ்ச்சமூக ஆர்வலர் மா. அன்பழகன் காலமானார்

5 mins read
b2b9a441-b147-43a6-bd6b-c9f29d659b28
கவிமாலை அமைப்பினை வழிநடத்தி அதன் காப்பாளராகச் செயல்பட்ட திரு மா. அன்பழகன் தமது 83ஆம் வயதில் இயற்கை எய்தினார். - படம்: இறை. மதியழகன்

தமிழ்மொழி ஆர்வலரும் சமூக ஆர்வலரும் வர்த்தகருமான திரு மா. அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 83.  

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் உடல்நலம் குன்றியிருந்த அவர், புதன்கிழமை (ஏப்ரல் 22) அதிகாலை, மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

சிங்கப்பூரில் கவிதைத் தமிழை ஊக்குவிக்கும் அமைப்பான கவிமாலைக்கு அமரர் அன்பழகன் தூணாகத் திகழ்ந்தார்.

கவிமாலை அமைப்பில் தலைவர், காப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வந்த திரு அன்பழகன், அந்த அமைப்பைப் பெரும் வளர்ச்சிக்கு இட்டுச்சென்றார். சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க தமிழ்மொழி ஆர்வலர் அமைப்பாக உருவெடுத்துள்ள கவிமாலை, தமிழ்மொழி விழாவுக்கு ஆண்டுதோறும் பங்காற்றி வருகிறது. மேலும், மாணவர்களுக்கும் தமிழ் ஆர்வமுள்ளோருக்கும் பல பயிலரங்குகளையும் நிகழ்ச்சிகளையும் அது நடத்தி வருகிறது.

2003ல் சிங்கப்பூரில் திரு அன்பழகனுக்கு ‘முத்தமிழ்க் காவலர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

‘ஆயபுலம்’, ‘என்பா நூறு’, ‘விடியல் விளக்குகள்’ உள்ளிட்ட நூல்களை வெளியிட்ட திரு அன்பழகன் கிட்டத்தட்ட 40 நூல்களை எழுதியுள்ளார். 

இறுதியாக, 2023ல் ‘செம்பியன் திருமேனி’ என்ற வரலாற்றுப் புனைவு நூலை வெளியிட்டார். கிட்டத்தட்ட 140 நூல்களின் வெளியீட்டுக்கு அவர் கைகொடுத்ததாகக் கூறப்படுகிறது.

1943ல் தமிழகத்தின் வேதாரண்யம் மாவட்டத்திலுள்ள ஆயக்காரன்புலம் எனும் கிராமத்தில் மாசிலாமணி-செல்லம்மாள் இணையருக்கு மகவாகப் பிறந்தார் திரு அன்பழகன்.

வணிக நிர்வாகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ள அவர், வர்த்தகராகவும் தமிழ் இலக்கிய ஆர்வலராகவும் செயல்பட்டு வந்தார்.

1971ஆம் ஆண்டு பழம்பெரும் தமிழக முதல்வர்கள் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் முன்னிலையில் திருவாட்டி திலகவதியைத் திருமணம் செய்தார். செல்வம், இராமையா இருவரும் இவர்களது மகன்கள். 

‘பாத பூஜை’, ‘புதுச்செருப்பு கடிக்கும்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த திரு அன்பழகன், பழம்பெரும் இயக்குநர் கே. பாலசந்தரிடம் பல்வேறு படங்களில் துணை இயக்குநராகவும் பணிபுரிந்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘புதுச்செருப்பு கடிக்கும்’ கதை திரைப்படமானபோது திரு அன்பழகன் அதைத் தயாரித்து, இயக்கினார்.

1994ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த அவர், தம் அண்ணன் காசிநாத தேவர் இங்கு நடத்திவந்த ‘செல்வி ஸ்டோர்ஸ்’ கடையில் பணியாற்றி, ஒரு கட்டத்தில் அதற்கான பொறுப்பையும் ஏற்றார்.

இந்தியாவில் மா.அன்பழகனின் ‘செம்பியன் திருமேனி’ நூல் வெளியீடு.
இந்தியாவில் மா.அன்பழகனின் ‘செம்பியன் திருமேனி’ நூல் வெளியீடு. - படம்: இறை. மதியழகன்

மனமுவந்து உதவிக்கரம் நீட்டுபவர்

‘புதுமைத்தேனீ’, ‘கவிமாமணி’ போன்ற அடைமொழிகளுக்குச் சொந்தக்காரரான திரு அன்பழகன், உற்சாகமும் தன்னம்பிக்கையும் நிறைந்தவர் எனப் பலராலும் பாராட்டப்பட்டவர். 

தந்தையைப்போல வழிகாட்டி, பலருக்கும் திரு அன்பழகன் ஊக்கமளித்ததாகக் கவிமாலைத் தலைவர் இன்பா தெரிவித்தார். “அவருக்கு மகள் இல்லை என்ற குறை தெரியாமல் என்னை மகள் என்றே அழைப்பார்.  அவரை அப்பா என்று பிரியமுடன் அழைக்கும் மகள்கள் அதிகமானோர் இருக்கிறோம்,” என அவர் உருக்கத்துடன் கூறினார்.

இலக்கிய ஆர்வலர் அமைப்பு என்பதற்கும் அப்பால் திரு அன்பழகன் வழிநடத்திய கவிமாலை அமைப்பு ஒரு குடும்பம்போல இருப்பதை அவர் சுட்டினார்.  “பிறரின் பிரச்சினைகளைக் களைவதில் அவர் ஆர்வம் காட்டி மும்முரமாகச் செயல்படுவார். மக்களை வேறுபடுத்திப் பார்க்காமல் எல்லாரிடமும் இயல்பாகப் பேசுவார்,” என்று திருவாட்டி இன்பா கூறினார்.

திரு அன்பழகன் எழுதி இன்னும் வெளிவராத நூல்களைத் தங்கள் அமைப்பு அவரது நினைவாக வெளியிடும் என்றார் அவர்.

திரு அன்பழகனுக்குப் ‘புதுமைத்தேனீ’ என்ற அடைமொழியைத் தாம் கொடுத்ததைக் குறிப்பிட்ட கவிஞரும் கவிமாலை அமைப்பின் நிறுவனருமான பிச்சினிக்காடு இளங்கோ, “எதைச் செய்தாலும், என்ன செய்தாலும் புதுமையைப் புகுத்துவார். அவர் இலக்கியவாதி என்ற நிலையைக் கடந்த பொதுநல விரும்பி,” என்றார்.

“முன்னதாக சென்னையில் அவர் தேர்ந்தெடுக்கப்படாத சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டவர். காலஞ்சென்ற தமிழக முதல்வர் மு. கருணாநிதியோடு நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது, தம்மை அணுகியோர்க்கெல்லாம் உதவி செய்தவர். யார், என்ன என்று பாராமல் அனைவருக்கும் உதவி செய்தவர்.

“வியாபாரத் துறையிலும் தமிழ்ச் சேவையிலும் உழைப்பே அவருக்கு மூலதனம். நேரத்தை அவர் ஒருபோதும் வீணாக்கியதில்லை. ஒரு பொழுதுபோக்காக இருந்தால்கூட அது இன்னொருவருக்குப் பயன்படுகிற வகையில் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று கருதியவர்,” என்று திரு இளங்கோ கூறினார்.

‘புதுமைத்தேனீ’ என்ற அடைமொழிக்கு நூறு விழுக்காடு சான்றாகச் சுறுசுறுப்பானவர் என்றும் தம்முடைய நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், படைப்புகள் ஆகியவற்றில் புதுமைகளைப் புகுத்தத் திரு அன்பழகன் தொடர்ந்து சிந்தித்துச் செயல்பட்டார் என்றும் கவிமாலை அமைப்பின் முன்னாள் தலைவரும் அமைப்பின் மதியுரைஞருமான இறை. மதியழகன் குறிப்பிட்டார்.

“கவிமாலை அமைப்பை அன்பான குடும்பமாக வழிநடத்தி, கவிஞர்கள் பலரை ஆதரித்து, வளர்த்து, நூல் வெளியீடுவரை நடத்தித் தந்து அவர்களுக்கு இலக்கிய வழிகாட்டியாக இருந்தார்,” என்று திரு மதியழகன் கூறினார்.

“வாய்மையோடும் தூய்மையோடும் வாழ்ந்து காட்டிய மனிதநேயர்,” என்று ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் மு.அ.காதர், திரு அன்பழகனைப் பாராட்டினார்.

“செய்யும் தொழிலில் நேர்மை, நேர மேலாண்மை, உதவிக்கரம் நீட்டுதல், கொடுத்த வாக்கை நிறைவேற்றுதல், வயது வேறுபாடு பாராமல் நண்பரைப் போலப் பழகும் பெருந்தன்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற வாழ்வியல் நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வது போன்றவை இவரின் தலைசிறந்த பண்புகள்,” என்று முனைவர் காதர் குறிப்பிட்டார்.

திரு அன்பழகனை 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரிந்துள்ளதாகக் கூறும் தமிழ்த்துறைப் பேராசிரியர் சுப. திண்ணப்பன், “பெயருக்கேற்ப உள்ளத்தில் அன்பு நிறைந்தவர்,” எனப் பாராட்டினார். ஈராண்டுகளுக்கு முன்னர் தாம் உடல்நலம் குன்றியிருந்த நிலையில், திரு அன்பழகன் தம் வீட்டிற்கு வந்தபோதெல்லாம், காய்கறி வாங்கி வந்ததை உருக்கத்துடன் நினைவுகூர்ந்தார். 

“35 ஆண்டுகளுக்கு மேல் தெரிந்த இனிய நண்பர்; நல்ல எழுத்தாளர். அவரது நூல்கள் பலவற்றிற்கு அணிந்துரை எழுதியிருக்கிறேன். தமது படைப்புகளுக்காக என்னிடம் அவர் அடிக்கடி ஆலோசனை பெற்றார்,” என்றார் பேராசிரியர் திண்ணப்பன்.

வெவ்வேறு புலமைத்திறம் உள்ளவர்களைத் தன் கவிமாலை அமைப்பின்கீழ் திரு அன்பழகன் தாயைப்போல அரவணைத்ததாக முதுபெரும் எழுத்தாளர் இராம. கண்ணபிரான் தெரிவித்தார்.

தமிழகத்திலிருந்து புதிதாகச் சிங்கப்பூர்க்குக் குடிபெயர்ந்தோரைத் தமது நிகழ்ச்சிகளின்வழி ஆக்ககரமாக ஈடுபடுத்தி இந்நாட்டின் அங்கங்களாக அவர் நன்கு ஒருங்கிணைத்ததையும் திரு கண்ணபிரான் குறிப்பிட்டார். அவரது ஊக்கத்தைப் பெற்ற பலர் சொந்த நூல்களை வெளியிட்டதுடன், விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

திரு அன்பழகனின் நல்லுடல் மருத்துவ ஆய்வுக்குத் தானமாக வழங்கப்பட இருப்பதால் அது தகனம் செய்யப்படமாட்டாது.

குறிப்புச் சொற்கள்