முரளி பிள்ளை: நிச்சயமற்ற உலகச் சூழலில் நமக்கு நாமே துணை

முரளி பிள்ளை: நிச்சயமற்ற உலகச் சூழலில் நமக்கு நாமே துணை

4 mins read
818dd1c8-3300-4a20-bf92-011a0720fcd5
மக்கள் கழக நற்பணிப் பேரவையின் வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையும் கலந்துகொண்டனர். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூர் எப்பொழுதும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் புதிய சூழல்களில் ஒரு சமூகமாக நாம் ஒருபோதும் பிளவுபட்டுவிடக்கூடாது என்றும் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை கூறியுள்ளார்.

நாம் வாழும் உலகச் சூழல் நிலையற்றதாய் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதால் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை விமானம் சிங்கப்பூரர்களை மீட்க அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது அதற்குச் சிறந்த உதாரணம் என்றார்.

“இதுபோன்ற நிச்சயமற்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க நாம் நம்மையே சார்ந்திருக்க வேண்டும்,” என்றார் திரு முரளி.

இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களைச் சேர்ந்த தொண்டூழியர்களுடனும் சமூகத் தலைவர்களுடனும் நடத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்தைய கலந்துரையாடலின் நிறைவுரையில் திரு முரளி இவ்வாறு கூறினார்.

மக்கள் கழக நற்பணிப் பேரவையின் வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையும் கலந்துகொண்டனர்.
மக்கள் கழக நற்பணிப் பேரவையின் வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையும் கலந்துகொண்டனர். - படம்: சுந்தர நடராஜ்

“இதுதான் சமூகத் தலைவர்களாகவும் அரசாங்கமாகவும் நாம் சுமக்கும் பொறுப்பு. நாம் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்வோம். ஒருபோதும் துவண்டுவிட மாட்டோம்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்கள் கழக நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் புதன்கிழமை (மார்ச் 11) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களைச் சேர்ந்த ஏறத்தாழ 150 அடித்தளத் தலைவர்கள், தொண்டூழியர்கள், சமூகத் தலைவர்கள் முதலியோர் கலந்துகொண்டனர்.

நற்பணிப் பேரவையின் ஆலோசகருமான திரு முரளியுடன் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த டாக்டர் ஜனில் புதுச்சேரி, இதுபோன்ற கலந்துரையாடல்கள் மிக முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணச் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்றார்.

“சில நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்களுக்காக அமைகின்றன. அங்கு நாம் உணவை ருசித்து, சமூக உணர்வோடு அளவளாவி மகிழ்கிறோம். அதே வேளையில் கடினமான, சவாலான பிரச்சினைகள் குறித்து ஆழமாக விவாதிப்பதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளும் நமக்குத் தேவைப்படுகின்றன,” என்று நற்பணிப் பேரவையின் ஆலோசகருமான அவர் கூறினார்.

விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட உலகளாவிய ஒழுங்குமுறை பலவீனமடைந்து வருவதாகக் கூறிய டாக்டர் ஜனில், கடந்த காலங்களில் சிங்கப்பூர் பல பெரிய வெளிநாட்டு நெருக்கடிகளை வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளதை நினைவுபடுத்தினார்.

இதற்கிடையே, பொங்கோல் வட்டாரத்தில் நற்பணித் தொண்டர்களுடன் இணைந்து சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) மேற்கொண்ட வீட்டுக்கு வீடு சென்று உதவி தேவைப்படுவோரைக் கண்டறியும் கூட்டு நடவடிக்கையைப் பற்றியும் டாக்டர் ஜனில் பேசினார்.

மக்கள் கழக நற்பணிப் பேரவையின் வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்தைய கலந்துரையாடலில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையும் கலந்துகொண்டனர்.
மக்கள் கழக நற்பணிப் பேரவையின் வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்தைய கலந்துரையாடலில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையும் கலந்துகொண்டனர். - படம்: சுந்தர நடராஜ்

மேலும் உதவி தேவைப்படும் குடும்பங்களை, உரிய ஆதரவுத் திட்டங்களோடு இணைக்கும் பணியில் அதிக ஈடுபாடு காட்ட 90 விழுக்காட்டிற்கும் அதிகமான இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதை திரு முரளி பாராட்டினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு நீடித்தது.

செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி, கணக்கியல் போன்ற வேலைகளில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள், தமிழுக்கென பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்துப் பங்கேற்பாளர்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

அத்துடன் உணவு, பானத் துறையினர் எதிர்கொள்ளும் அதிக வாடகைச் செலவுகள், வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டு வரம்பு தொடர்பான பொருளியல், வர்த்தக ரீதியான அக்கறைகளும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இந்தியர்களிடையே பட்டதாரிகளின் எண்ணிக்கை, அதிக வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை மேம்பட்டுள்ளபோதும் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு இன்னும் குறிப்பிட்ட சில உதவிகள் தேவைப்படுவதாக நற்பணிப் பேரவையின் தலைவர் ரவீந்திரன் கணேசன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“நமது இந்தியச் சமூகத்தில் இன்றும் போதிய முன்னேற்றம் அடையாமல் உள்ளனர். இது எங்களுக்குக் கவலையளிக்கிறது,” என்று கூறிய அவர், அவர்களுக்கு கைகொடுத்து ஆதரவளிப்பதற்காகவே ‘இணை’ போன்ற புதிய ஈடுபாட்டு மேம்பாட்டுக் குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பங்கேற்பாளர்களின் கருத்துகள்

கலந்துரையாடலில் பங்கேற்ற ஜாலான் புசார் நற்பணிச் செயற்குழுவைச் சேர்ந்த 20 வயது கணக்கியல் மாணவி ஃபஹீமா சயிது அலி ரஷிக், உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான நிதி உதவி குறித்துக் கேள்வி எழுப்பியதாக கூறினார்.

“தொடக்கக்கல்லூரி வரை நிதி உதவித் திட்டம் போன்ற தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. அதன்பிறகு தகவல்கள் அவ்வளவு தெளிவாக இல்லை. மாணவர்கள் உதவி பெற எங்கு செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை அதிகரிப்பது பெரிதும் உதவும்,” என்றார் அவர்.

இது பல்வேறு அங்கங்களை உள்ளடக்கியதாகவும் இது தொடர்ந்து அரசாங்கத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும் டாக்டர் ஜனில் கூறியதாக ஃபஹீமா கூறினார்.

மக்கள் கழக நற்பணிப் பேரவையின் வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில் கிட்டத்தட்ட 150 பேர் பங்கேற்றனர்.
மக்கள் கழக நற்பணிப் பேரவையின் வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில் கிட்டத்தட்ட 150 பேர் பங்கேற்றனர். - படம்: சுந்தர நடராஜ்

ஜூரோங் கிரீன் நற்பணிச் செயற்குழுவைச் சேர்ந்த உளவியல்துறையில் பயிலும் மாணவி சந்தியா கார்த்திகேயன், 22, இந்தியச் சமூகத்தில் மனநலம் தொடர்பான பிரச்சினைகளைப் பேசுவதில் உள்ள தயக்கம் குறித்துக் கேள்விகளை முன்வைத்ததாகக் கூறினார். அத்துடன் நேரடி ஆலோசகர்களுக்குப் பதிலாகச் செயற்கை நுண்ணறிவை மக்கள் பயன்படுத்துவது குறித்த தமது கவலைகளையும் அவர் முன்வைத்தார்.

“ஆலோசகர்கள் நாங்கள் கூறுவதைக் கவனமாகக் கேட்டு, குறிப்புகளை எடுத்துக்கொண்டு, நேரடியாகப் பதிலளித்தது சிறப்பாக இருந்தது. எங்கள் கவலைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக உணர்ந்தோம்,” என்றும் சந்தியா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்