காருடன் மோதிய மோட்டார்சைக்கிள்கள்; நால்வர் காயம்

1 mins read
23a33f0e-453b-48e3-95a5-c9f6ae3c22ff
காரின்மேல் விழும் விதமாக மோட்டார் சைக்கிளோட்டி விபத்துக்குள்ளானார். - படம்: ரோட்ஸ் எஸ்ஜி ஃபேஸ்புக் பதிவின் புகைப்படம்

தீவு விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் விட்லி ரோட்டில் திங்கட்கிழமை (நவம்பர் 10) காலை நடந்த சாலை விபத்தில் நால்வர் காயமுற்றனர். அந்த விபத்தைப் பற்றிய தகவல் அன்று காலை 8.30 மணிக்குக் கிடைத்ததாக காவல்துறை குறிப்பிட்டது.

ஒரு காரை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளோட்டி காரின் கூரைமேல் விழுந்தார். மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த 37, 33 வயதான இரண்டு ஆண் ஓட்டுநர்களும் அவர்களது 28, 21 வயதான இரு பெண் பயணிகளும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காரின் 51வயது ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார். மற்றொரு காரின் முன்பக்க கேமராவில் பதிவான காணொளியில், இடது புறத்தில் இருந்த சிறிய சாலையிலிருந்து வெளியேறி விட்லி ரோட்டின் எதிர்புறத்தை நோக்கி ஒரு கார் திரும்ப முயல்கிறது. அந்தக் காரின்மீது இரு மோட்டார்சைக்கிள்களும் மோதியதைக் காணொளியில் காணமுடிந்தது.

கார்மீது மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரில், ஒரு மோட்டார்சைக்கிளோட்டி காரின் கூரைமீது விழுந்தார்.

நினைவுதிரும்பிய அவர் உடனே காரின் பக்கவாட்டின் வழியாக இறங்கிச் சென்றார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையிடம் மேல் விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்