சிங்கப்பூர் குடியிருப்பாளர்களில் சமயச் சார்பற்றோர் விகிதம் உயர்வு

சிங்கப்பூர் குடியிருப்பாளர்களில் சமயச் சார்பற்றோர் விகிதம் உயர்வு

2 mins read
2010ல் 17 விழுக்காடாக இருந்த இந்த எண்ணிக்கை, 2025ல் 23.9 ஆக அதிகரிப்பு: 2025ஆம் ஆண்டிற்கான பொதுக் குடும்பக் கருத்தாய்வு அறிக்கை
0385f1a9-f099-45ee-b5ef-d2b57e0735de
இளையர்களில் அதிகமானோர் சமயச்சார்பற்றவர்களாக இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களிடையே 6.7 விழுக்காடு உயர்ந்து 29 விழுக்காடாக உள்ளது. - கோப்புப் படம்: சாவ் பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூர்வாசிகளில் சமயச் சார்பற்றோர் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் 20 விழுக்காடாக இருந்த இந்த எண்ணிக்கை, 2025ல் 23.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இந்தப் போக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வருவதை சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான பொதுக் குடும்பக் கருத்தாய்வு அறிக்கை சுட்டியது.

தற்போது சிங்கப்பூர்வாசிகளில் நான்கில் ஒருவர் சமயச்சார்பற்றவராக அடையாளம் காணப்பட்டுள்ளார், கடந்த 2010ல் இது 17 விழுக்காடாக இருந்தது.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு இடைப்பட்ட காலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்த ஆய்வு, சிங்கப்பூரின் மக்கள்தொகை, குடும்பப் போக்குகளின் தற்போதைய நிலவரத்தைக் காட்டுகிறது. இதற்கு முந்தைய ஆய்வு கடந்த 2015ல் வெளியிடப்பட்டது.

இந்து சமயத்தவர் எண்ணிக்கை அதிகரிப்பு

கருத்தாய்வின்படி, 15 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடியிருப்பாளர்களிடையே பௌத்தம், தாவோயிசம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய சமயங்களைப் பின்பற்றுவோரின் விகிதத்தில் பொதுவான சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்து சமயத்தைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை 5 விழுக்காட்டிலிருந்து 5.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த சமயக் கட்டமைப்பில் பௌத்தர்கள் 30.9 விழுக்காடு, தாவோயிசர்கள் 7.3 விழுக்காடு, கிறிஸ்துவர்கள் 17.1 விழுக்காடு, முஸ்லிம்கள் 15 விழுக்காடாகவும் உள்ளனர்.

கல்வித் தகுதி அடிப்படையில் அனைத்து நிலைகளிலும் சமயச்சார்பற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பல்கலைக்கழகப் பட்டதாரிகளிடையே கிறிஸ்துவ சமயத்தைப் பின்பற்றுவோரின் விகிதம் 28.3 விழுக்காட்டிலிருந்து 24.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இளையர்களில் அதிகமானோர் சமயச் சார்பற்றவர்களாக இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 26.8 விழுக்காடாக உள்ளது. 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களிடையே 6.7 விழுக்காடு உயர்ந்து 29 விழுக்காடாக உள்ளது. 55 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களில் இந்த விகிதம் 19.4 விழுக்காடு.

சீனர்களிடையே சமயச்சார்பற்றோரின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாக அதிகரித்துள்ள போதிலும், பௌத்தமே முதன்மைச் சமயமாக உள்ளது. மலாய் சமூகத்தினரிடையே முஸ்லிம்களின் விகிதம் 98.6 விழுக்காடாகவும், இந்தியச் சமூகத்தினரிடையே இந்து சமயத்தினர் 58.8 விழுக்காடாகவும் தொடர்ந்து பெரும்பான்மையாக நீடிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்