ஊழியரின் $5,700 கூடுதல் நேர ஊதியத்தை வழங்குமாறு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

ஈராண்டுச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்திய ஊழியருக்கு வெற்றி

ஊழியரின் $5,700 கூடுதல் நேர ஊதியத்தை வழங்குமாறு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

2 mins read
bd9b9366-8be2-484b-b0b2-f98379e1bae0
ஊழியர் பணிபுரிந்த கூடுதல் நேரத்திற்கான ஊதியத்தை, “இதர மானியம்” என்ற பெயரில் வழங்கப்படும் தொகையைக் கொண்டு ஈடுசெய்யவோ அதற்குள் அடக்கவோ முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்திய நாட்டவரான திரு ஜேனா ஹுலாஷ் ராமுக்கு $5,700க்கும் அதிகமான கூடுதல் நேர ஊதியத்தை வழங்கும்படி அவரது முன்னாள் முதலாளிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரு ஜேனா ஹுலாஷ் ராம், ‘லிம் ஜு ஹுவாட் என்டர்பிரைஸ்’ நிறுவனத்தில் 2022 முதல் 2023 வரை பணிபுரிந்தார். மனிதவள அமைச்சு அளித்த வேலை ஒப்பந்தக் கடிதத்தின்படி, அவருக்கு அடிப்படைச் சம்பளம் $1,000. வீட்டு வாடகை $200, மற்ற மானியம் $300 என மொத்தம் $1,500 மாதச் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. வேலை நேரத்திற்கு அப்பால் கூடுதல் நேர ஊதியமாகக் கொடுக்கப்பட வேண்டிய தொகை, மணிக்கு $7.87 எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

திரு ஜேனாவுக்கு கூடுதல் நேரப் பணிக்காக $5,711 ஊதியம் கொடுக்கப்படாதபோது 2023 டிசம்பரில் அவர் சிறு கோரிக்கை மன்றத்தை நாடினார்.

$300 மாதாந்திர மானியத்தொகையிலேயே கூடுதல் நேர ஊதியம் அடங்கிவிடும் என்று நிறுவனம் வாதிட்டது. சிறு கோரிக்கை மன்றம் அதனை ஓர் ஒப்பந்தமாக ஏற்றுக்கொண்டதால், ஜேனாவிற்கு வழங்கப்பட வேண்டிய தொகை $3,254.84 ஆகக் குறைத்தது.

தீர்ப்பை எதிர்த்து ஜேனா மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பிலிப் ஜெயரத்னம், கூடுதல் நேர ஊதியத்திற்குக்குறிப்பிட்ட உச்சவரம்பையோ நிலையான ஒரு தொகையையோ முதலாளிகளால் நிர்ணயிக்க முடியாது என்றார்.

மனிதவள அமைச்சின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை மாதச் சம்பளம், நிலையான மாதாந்திர மானியம், நிலையான மாதச் சம்பளம் ஆகியவை அமைச்சின் விதிமுறைகளின் கீழ் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த வரையறைகளின்படி, “நிலையான மாதாந்திர மானியத்தில் எந்த விதமான கூடுதல் நேர ஊதியமும் சேர்க்கப்படக்கூடாது,” என்று அவர் கூறினார்.

ஊழியர் பணிபுரிந்த கூடுதல் நேரத்திற்கான ஊதியத்தை, “இதர மானியம்” என்ற பெயரில் வழங்கப்பட்ட தொகையைக் கொண்டு ஈடுசெய்யவோ அதற்குள் அடக்கவோ முடியாது என்றார் அவர்.

உயர் நீதிமன்றம் ஜேனா ஹுலாஷ் ராமின் முழு உரிமைகோரல் தொகையான $5,711.11ஐ மீண்டும் உறுதி செய்ததோடு, வழக்கிற்கான செலவுத் தொகையாக $9,000ஐ அந்த நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஜேனாவுக்காக இலவசமாக வாதாடிய டிஎஸ்எம்பி சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் மெல்வின் சான் கா கீன், அமெலியா டான் ஹான் ரூ இருவரின் சேவையைப் பாராட்டிய நீதிபதி பிலிப், “சட்ட உதவிக்கான வசதி இல்லாதவர்களுக்குக் கட்டணமின்றி வாதாடுவது, சட்டத்துறையின் மிகச் சிறந்த பாரம்பரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்,” என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்