மார்ச் விடுமுறை: நிலச் சோதனைச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

மார்ச் விடுமுறை: நிலச் சோதனைச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

2 mins read
fd9bcb98-75cb-4bba-af9a-babd436859f3
மத்திய கிழக்கில் அண்மையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் பாதுகாப்புச் சோதனைகள் வலுப்படுத்தப்பட்டிருப்பதும் நீண்ட காத்திருப்பு நேரத்திற்குக் காரணம். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வரும் மார்ச் 13ஆம் தேதிமுதல் மார்ச் 22ஆம் தேதிவரை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள்வழி மலேசியாவுக்குச் செல்லும் பயணிகள் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் கூறியுள்ளது.

மார்ச் பள்ளி விடுமுறை, மார்ச் 21ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாள், அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சோதனைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அண்மையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால், சோதனைச்சாவடிகளில் பாதுகாப்புச் சோதனைகளை வலுப்படுத்தப்போவதாக ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது.

குடிநுழைவைக் கடந்துசெல்ல பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியிருக்கும் என்று அது திங்கட்கிழமை (மார்ச் 9) கூறியது.

பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், நிலச் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நிலைமையைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு ஆணையம் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில், பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19 வரை காரில் பயணம் செய்தோர் உச்ச நேரங்களில் குடிநுழைவைக் கடந்துசெல்ல மூன்று மணி நேரம்வரை காத்திருந்ததாக ஆணையம் கூறியது.

அந்தக் காலகட்டத்தில் நிலச் சோதனைச்சாவடிகளைக் கடந்துசென்ற பயணிகளின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியதாகவும் அது தெரிவித்தது.

பிப்ரவரி 13ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது. அந்த நாளன்று, இரண்டு சோதனைச்சாவடிகளையும் 565,000 பயணிகள் கடந்துசென்றனர்.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிகளை நெருங்கும்போது, வாகனவோட்டிகள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் ஆணையம் கூறியது. சோதனைச்சாவடிக்கு வெளியில் உள்ள சாலைகளில் கட்டுமான, சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதே அதற்குக் காரணம்.

இந்நிலையில், கடப்பிதழ்களைப் பயன்படுத்தாமல், ‘மைஐசிஏ’ (MyICA) கைப்பேசிச் செயலியில் உள்ள விரைவுத் தகவல் குறியீட்டைப் (QR code) பயன்படுத்துமாறு ஆணையம் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பயணிகள் கட்டாயமாகத் தங்கள் கடப்பிதழ்களைக் கொண்டுசெல்லவேண்டும் என்றும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்
நோன்புப் பெருநாள்பயணிகள்சோதனைச்சாவடிபோக்குவரத்துவிடுமுறைஉட்லண்ட்ஸ்நெரிசல்