அல்ஜூனிட் ரோடு அருகில் புதன்கிழமை (மே 10) அதிகாலை 5.15 மணியளவில் ஆடவர் ஒருவர் கையில் இரும்புக் கம்பியுடன் நடமாடியுள்ளார்.
மேம்பாலம் ஒன்றைக் கடந்து சென்றபோது அதன்கீழே அந்த ஆடவர் உரத்த குரலில் சத்தம்போட்டதைப் பார்த்த பொதுமக்களில் ஒருவர் காவல்துறையை உதவிக்கு அழைத்தார்.
சம்பவ இடத்தை சில நிமிடங்களில் வந்தடைந்த காவல்துறையினர் ஆடவரிடம் இருந்து தூக்க மாத்திரைகள், போதைப்பொருள் பயன்பாட்டுக்கான சாதனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
ஆடவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
போதைப்பொருள் சார்ந்த விவரங்கள் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (சிஎன்பி) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தூக்க மருந்துகள் சுகாதார அறிவியல் ஆணையத்தால் (ஹெச்எஸ்ஏ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கைது நடவடிக்கை
இந்த விவரங்களை காவல்துறை உறுதிப்படுத்தியது. கையில் இரும்புக் கம்பியுடன் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றத்துக்கும், போதைப்பொருள் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரிலும் ஆடவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.

