ஆனந்தபவன் உணவகத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கி வரும் மு.கு.இராமச்சந்திரா புத்தகப் பரிசு, இவ்வாண்டு எழுத்தாளர் ரமா சுரேஷின் ‘அம்பரம்’ நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வெற்றியாளருக்குப் பொன்னாடைப் போர்த்தி $3,000 வெள்ளிக்கான காசோலையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மூன்று நடுவர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த நாவல் ‘அம்பரம்’ என்று கழகத்தின் செயலாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம் அறிவித்தார்.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிகமாகச் சிறுகதைகளே வந்துகொண்டிருந்த காலம் மாறி, கடந்த ஐந்து ஆண்டுகளாக நாவல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்ற ஆண்டு கழகத்தின் செயலவை கலந்தாலோசித்து, சிறுகதை, கவிதை, கட்டுரையோடு நாவலையும் இணைத்துக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
16ஆவது ஆண்டாக நடைபெற்ற இப்பரிசளிப்பு விழா 23.8.2025 அன்று சையது ஆல்வி சாலையிலுள்ள ஆனந்தபவன் உணவகத்தின் மேல்தளத்தில் நடைபெற்றது. ஆனந்தபவன் உணவகத்தின் குடும்பத்தைச் சேர்ந்த திருவாட்டி லாவண்யா வீரன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
“அரசாங்கமும், ஆனந்த பவன் உணவகம் போன்ற பல நிறுவனங்களும், கழகங்களும் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுகின்றன. இன்றைய இளையர்கள் இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்,” என்ற சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் திரு முகமது இர்ஷாத், சிங்கப்பூர்த் தமிழ் நூல்கள் உலகளாவிய அளவில் புகழ் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் பதிவுசெய்தார்.
முன்னதாகத் தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு.சு.முத்துமாணிக்கம், இப்பரிசளிப்புக்கு நிதியாதரவு நல்கும் ஆனந்தபவனின் உரிமையாளர்கள் திருவாட்டி பானுமதி இராமச்சந்திரா, திருவாட்டி பரமேஸ்வரி எட்டிகன், திரு.வீரா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
ஏற்புரையாற்றிய திருவாட்டி ரமா சுரேஷ், ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னைப் புதிப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். தற்போதைய நவீன காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல் தனது எழுத்துகளையும் வாசிப்பின் தரத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கழகத் துணைச் செயலாளர் திரு. ரமேஷ் பாலா நன்றியுரை ஆற்ற கழகத்தின் உறுப்பினர் திருவாட்டி ஷோபா குமரேசன் நிகழ்ச்சியை சிறப்புடன் நெறிப்படுத்தினார்.

