மா.அன்பழகன் உடற்கொடை: தவற்றுக்கு மன்னிப்பு கோரிய உறுப்பு மாற்றுப் பிரிவு

மா.அன்பழகன் உடற்கொடை: தவற்றுக்கு மன்னிப்பு கோரிய உறுப்பு மாற்றுப் பிரிவு

1 mins read
1789196a-328b-4f82-af68-8944ecb8c8e0
புதுமைத்தேனீ மா.அன்பழகனின் நல்லுடலை மருத்துவத் துறையினர் பெற்றுச் சென்ற முறை வேதனை அளிப்பதாக இருந்தது என்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா. ஆண்டியப்பன் தெரிவித்திருந்தார். - படம்: தேசிய உறுப்பு மாற்றுப் பிரிவு
Google News Preferred Icon

அண்மையில் காலமான கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகனின் நல்லுடல் மருத்துவ ஆராய்ச்சிக்குக் கொடையாக அளிக்கப்பட்டது.

அவரது நல்லுடலை மருத்துவத் துறையினர் பெற்றுச் சென்ற முறை வேதனை அளிப்பதாக இருந்தது என்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா. ஆண்டியப்பன் தமிழ் முரசு வாசகர் குரல் வாயிலாகத் தமது ஆதங்கத்தைப் பதிவுசெய்திருந்தார்.

இந்நிலையில், சுகாதார அமைச்சின் தேசிய உறுப்பு மாற்றுப் பிரிவு அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அப்பிரிவின் இயக்குநர் பேராசிரியர் டான் சீ கியட் விளக்கமளித்துள்ளார்.

“தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட திரு நா.ஆண்டியப்பனுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். திரு மா.அன்பழகனின் இறுதிச் சடங்கின்போது, அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

“உடற்கொடை செய்யும் அனைவரும் எங்களது ஊழியர்களால் மிக உயர்ந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுகின்றனர். கொடையாக அளிக்கப்பட்ட உடல், சவப்பெட்டியிலேயே மருத்துவ நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பது நடைமுறை விதி.

“அப்படியிருக்கையில், அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படாததற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். அவ்வாறு நடந்திருக்கக் கூடாது. எங்களது மன்னிப்பைத் தெரிவிப்பதற்கும் மேலதிக உதவிகளை வழங்குவதற்கும் திரு அன்பழகன் குடும்பத்தாரைத் தொடர்புகொண்டுள்ளோம்.

“இத்தகைய தவறு மீண்டும் நிகழாமல் இருக்க, எங்களது நடைமுறைகளை நாங்கள் மறுஆய்வு செய்துள்ளோம். அத்துடன், ஊழியர்கள் அனைவர்க்கும் நடைமுறை விதிகள் குறித்து நினைவூட்டியுள்ளோம்,” என்று பேராசிரியர் டான் தமிழ் முரசுக்கு அனுப்பிய விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்