கிளமென்டியின் சன்செட் வே பகுதியில் உள்ள 15 ஹெக்டர் பரப்பளவு காட்டுப்பகுதியின் நிலம் புதிய வீடமைப்புத் திட்டத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்கால வீடமைப்புக்கு அடையாளம் காணப்பட்டுள்ள மாஜு காடு, ஏறத்தாழ 23 ஹெக்டர் அளவுடையது.
1980ஆம் ஆண்டு முதல் அப்பகுதி பொது வீடமைப்புக்கென வரைவு செய்யப்பட்டது. அந்த பசுமையான வட்டாரத்தில் சுற்றுப்புற ஆய்வை மேற்கொள்ளும்படி வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஆணை பிறப்பித்திருந்தது.
இந்த விவரங்களைக் கழகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) அறிவித்தது.
புரூக்வெல் டிரைவ், கிளமென்டி ரோடு, சன்செட் வே ஆகிய எல்லைகளைச் சுற்றளவில் கொண்ட காட்டுப் பகுதியின் 8 ஹெக்டர் பரப்பளவு நிலம் வனவிலங்குகளுக்கும் இயற்கை வனப்புக்கும் தொடர்ந்து புகலிடம் வழங்கும் விதமாகப் பாதுகாக்கப்படும் எனவும் வீவக விளக்கம் அளித்தது.
பாதுகாக்கப்படும் இயற்கை வளங்களில் அங்குள்ள நன்னீரோடை, பல்லுயிர்ச் சூழல் நிறைந்த செடிகொடிகள் ஆகியவற்றோடு ‘ஓல்டு ஜூரோங் லைன்’ எனப்படும் பழைய ரயில் தண்டவாளம் இருந்த வழிப்பாதையும் அடங்கும். அதில் புதிதாக 4 கிலோமீட்டர் நீளமுள்ள இயற்கை நடைபாதை அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.
திட்ட வடிவமைப்பு முழுமையடையும் வரையில் இயற்கை ஆர்வலர்களும் அதில் பங்கேற்றனர் என்று வீவக கூறியது.
வீடமைப்புக் கட்டுமானப் பகுதியில் பாதிக்கப்படும் இயற்கை வளம் சார்ந்த மரம், செடிகொடிகள் முடிந்தவரை படிப்படியாக மாற்று இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.
பசுமை நிறைந்த, சிங்கப்பூரிலேயே வளரக்கூடிய செடிகொடிகள் உள்ளடங்கிய குடியிருப்பாக எதிர்காலத்தில் அப்பகுதி அமையும் எனவும் வீவக தெரிவித்தது.
அருகில் உள்ள கிளமென்டி இயற்கை நடைபாதையும், பழைய ஜூரோங் ரயில் தண்டவாளப் பாதையும் மேம்படுத்தப்பட்டு வீடமைப்புத் திட்டத்தோடு இயற்கையை இணைக்கும் விதமாகக் கட்டிமுடிக்கப்படும்.
வீடுகளின் எண்ணிக்கை உட்பட எதிர்கால குடியிருப்பு குறித்த மேல் விவரங்கள் பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மூன்றில் ஒரு பங்கு காட்டுப் பகுதியைப் பாதுகாக்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் எடுக்கும் நடவடிக்கை இயற்கைக்கும் வட்டார மேம்பாட்டுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சியின் வெளிப்பாடு என்று சிங்கப்பூர் இயற்கை சங்க உறுப்பினரான லெஸ்டர் டான் கருத்துரைத்தார்.
இலைகள் நிறைந்த நீண்ட நெடிய மரங்கள் பாதுகாக்கப்பட்டால் பறவைகளுக்கு அது ஏதுவாக அமையும் என்றார் அவர். இருப்பினும் மாஜு காட்டில் காணப்படும் எறும்புதின்னி விலங்குகள் கூச்ச சுபாவம் உடையவை என்பதால் மனிதர்களுக்கு இடையே வாழ்வதை அவை விரும்பாமல் பாதிக்கப்படலாம் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.


