சிங்கப்பூரில் 1986ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட சுமார் 305,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன.
'இல்ல மேம்பாட்டுச் செயல்திட்ட'த்திற்குத் தகுதிபெற்ற அத்தகைய வீடுகளில் இவை 95 விழுக்காடாகும்.
மேலும் 11,000 வீடுகள் (4%) இப்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எஞ்சிய 1% வீடுகளைப் பொறுத்தவரை இல்ல மேம்பாட்டுச் செயல்திட்டத்திற்கு குடியிருப்பாளர்கள் இனிமேல்தான் வாக்களிக்க வேண்டும்.
இல்ல மேம்பாட்டுச் செயல்திட்டம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 1987க்கும் 1997க்கும் இடையில் கட்டப்பட்ட 230,000 வீடுகளில் 1,200 வீடுகள் மேம்பாடு கண்டு இருக்கின்றன. இதர 55,000 வீடுகளில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
இல்ல மேம்பாட்டுச் செயல்திட்டத்தில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன. அத்தியாவசிய மேம்பாடுகள், விருப்ப மேம்பாடுகள், முதியோருக்கான மேம்பாடுகள் ஆகியவை அந்த மூன்று அம்சங்கள் ஆகும்.
இடிந்து விழுந்து இருக்கும் கான்கிரீட் பகுதிகளைச் சரிபார்ப்பது, துணி காயவைக்கும் சாதனங்களைப் பொருத்துவது போன்றவை அத்தியாவசிய மேம்பாடுகளில் உள்ளடங்கும்.
இவற்றுக்கு ஆகும் செலவை அரசாங்கமே ஏற்கும். புதிய வாயில் கதவுகள், இரும்புக் கதவுகள் போன்ற விருப்ப மேம்பாடுகளைப் பொறுத்தவரை மானியங்கள் உண்டு.
அதேபோல முதியோருக்கான கைப்பிடி குழாய்கள், தரை வழுக்காமல் இருக்க வேலைப்பாடுகள் போன்ற வசதிகளை உருவாக்கவும் மானியம் கிடைக்கும்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஜூரோங் வெஸ்ட்டில் இல்ல மேம்பாட்டுச் செயல்திட்டப் பணிகள் நடக்கும் ஒரு பகுதிக்கு நேற்று சென்றார்.
முதியோருக்கான மேம்பாடுகள் இரண்டு புதிய அம்சங்கள் ஏப்ரல் 4 முதல் சேர்க்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
வீட்டின் உள்ளே செல்வதற்கு வாயிலில் மூன்று படிக்கட்டுகளுக்கும் அதிகமாக உள்ள வீடுகளைப் பொறுத்தவரை சாய்வுத் தளம் அமைக்கப்படும்.
சாய்வுத் தளம் அமைக்க இயலவில்லை என்றால் சக்கர நாற்காலி தூக்கு வசதிகள் அமைக்கப்படும்.


