வரும் ஆண்டுகளில் புதுப்பிக்கப்படவுள்ள வீவக ஈரச் சந்தைகள்

வரும் ஆண்டுகளில் புதுப்பிக்கப்படவுள்ள வீவக ஈரச் சந்தைகள்

2 mins read
4f520ea2-5c7c-466a-ad88-629169ae118a
உட்லண்ட்ஸ் நார்த் பிளாசாவில் உள்ள ஈரச் சந்தை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

நான்கு அக்கம்பக்கங்களில் உள்ள குடியிருப்பாளர்கள், வரும் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்ட ஈரச் சந்தைகளை எதிர்பார்க்கலாம்.

முப்பது ஆண்டுகள் தனியார் வசம் இருந்த அந்த ஈரச் சந்தைகள், அவற்றுக்கான குத்தகைக் காலம் காலவதியானதும், மீண்டும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் (வீவக) ஒப்படைக்கப்படவுள்ளன.

அந்த ஈரச் சந்தைகளுக்கான குத்தகைகள் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் காலாவதியாகவுள்ளன.

அவை, ஃபாஜார் கடைத்தொகுதி, யூ டீ ஸ்குவேர், புக்கிட் பாத்தோக் வெஸ்ட் கடைத்தொகுதி, உட்லண்ட்ஸ் நார்த் பிளாசா ஆகிய இடங்களில் அமைந்துள்ளதாகத் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், மே 9ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் கூறினார்.

அவர் கியட் ஹொங், சிராங்கூன் ஆகிய பகுதிகளில் உள்ள மற்ற இரண்டு ஈரச்சந்தைகளைச் சுட்டிக்காட்டினார். அந்த ஈரச் சந்தைகள் அவற்றின் குத்தகைக் காலத்திற்குப் பிறகு மீண்டும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் புதுப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த நான்கு ஈரச் சந்தைகளுக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், பொருள்களை வாங்குவதில் வீட்டுக்கு அருகிலேயே மேம்பட்ட அனுபவத்தை எதிர்பார்க்கலாம் என்றார் திருவாட்டி சுன்.

சென்ற 2024ஆம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் திறக்கப்பட்ட கியட் ஹொங் உணவு நிலையத்தை ஃபேர்பிரைஸ் குழுமத்தின் ஒரு பகுதியான ‘கோப்பிதியாம்’ இப்போது நிர்வகிக்கிறது.

சிங்கப்பூர் பூல்ஸ், கடந்த ஜனவரியில் மீண்டும் திறக்கப்பட்ட சிராங்கூன் சென்ட்ரல் வில்லேஜை நிர்வகிக்கிறது.

சிராங்கூன் சந்தையை மே 8ஆம் தேதி சென்றுபார்த்த திருவாட்டி சுன், புதுப்பிப்புக்குப் பிறகு அந்தச் சந்தை மேலும் தூய்மையாகவும் வெளிச்சமாகவும் இருப்பதாகக் கூறினார். தற்போது அங்குப் புதிய உணவுக் கடை, சமூக இடம் ஆகியவை உள்ளதாகவும் அவர் சொன்னார்.

“முன்னதாக தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஈரச் சந்தைகள் அவற்றின் குத்தகைக் காலம் முடிந்ததும், எவ்வாறு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் புதுப்பிக்கப்படுகின்றன என்பதற்கான ஓர் உதாரணம்தான் அந்தச் சந்தை,” என்று திருவாட்டி சுன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்