வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் 7 ஆண்டுகளில் முதன்முறையாகச் சரிவு

வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் 7 ஆண்டுகளில் முதன்முறையாகச் சரிவு

2 mins read
8dd4f6b8-a9da-41a9-bffb-bb37990162ec
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 6,179 வீவக வீடுகள் கைமாறின. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலைகள் ஏழாண்டுகளுக்குப் பிறகு சரிவுகண்டது.

சென்ற ஆண்டின் (2025) நான்காவது காலாண்டுடன் ஒப்புநோக்க, இவ்வாண்டின் முதல் காலாண்டில் மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.1 விழுக்காடு குறைந்துள்ளன.

அண்மைய மறுவிற்பனை வீட்டு விலைக் குறியீட்டின் முன்னோடி மதிப்பீட்டை வீவக புதன்கிழமை (ஏப்ரல் 1) வெளியிட்டது.

காலாண்டு அடிப்படையில், மறுவிற்பனை விலைகளில் இதற்கு முன்னர் கடைசியாக ஏற்பட்ட சரிவு, 2019ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவானது என்று கழகம் கூறியது.

‘‘கடந்த 5 காலாண்டுகளாக விலைகள் மெதுவாக வளர்ச்சி அடைந்தன; அல்லது வளர்ச்சியின்றி நிலையாக இருந்தன. அதற்குப் பிறகு இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது,’’ என்றும் வீவக குறிப்பிட்டது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில், அதாவது மார்ச் 30 வரை, மறுவிற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 6,179ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் பதிவான 6,473 பரிவர்த்தனைகளைவிட 4.5 விழுக்காடு குறைவு என்றும் கழகம் தெரிவித்தது.

வீவக வீடுகளின் விலைச் சரிவின் பின்னணி

சிங்கப்பூரில் வீவக மறுவிற்பனை வீடுகளின் விலைகள் தொடர்ந்து 26 காலாண்டுகளாக உயர்ந்து வருகின்றன அல்லது ஒரே நிலையில் உள்ளன என்று சுட்டிய  அறிக்கை, இந்தப் போக்கு 2019ம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது எனவும் குறிப்பிட்டது.

கொவிட்-19 பெருந்தொற்றின்போது தேவைக்கேற்பக் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளின் கட்டுமானம் மந்தமடைந்ததாலும் புதிய குடியிருப்புகள் மிகக் குறைவாகக் கட்டப்பட்டதாலும் புதிய வீடுகளின் எண்ணிக்கை குறைந்தது.

இதனால் வீவக மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை அதிகரித்தது. விலைகள் கூடின அல்லது நிலையாக இருந்தன என்று தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டின் கடைசி மூன்று காலாண்டுகளில் விலையேற்றம் 1 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தது. அதனையடுத்து, வீட்டு விலை ஏறுமுகமாக இல்லை என்று வீவக ஜனவரி மாதம் குறிப்பிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்