தென்கொரியாவுக்கு $105,000 அபராதம் செலுத்திய ஜிஐசியின் மூன்றாம் தரப்பு முகவர்

தென்கொரியாவுக்கு $105,000 அபராதம் செலுத்திய ஜிஐசியின் மூன்றாம் தரப்பு முகவர்

2 mins read
3bb18f4e-19ff-493e-b2b5-8ae53843d036
அந்தச் சம்பவத்திற்கு ஜிஐசியின் மூன்றாம் தரப்பு முகவரின் செயல்பாட்டுக் குறைபாடுகள், பிழைகள், ஒப்பந்த விதி மீறல்கள் காரணம் என்று ஜிஐசி வியாழக்கிழமை (ஜனவரி 22) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.  - படம்: புளூம்பர்க்

முறையற்ற பங்கு விற்பனை தொடர்பில் சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ஜிஐசியின் மூன்றாம் தரப்பு முகவர் தென்கொரியாவுக்கு 120.6 மில்லியன் வோன் (S$105,000) அபராதம் செலுத்தியுள்ளதாகத் தென்கொரிய ஒழுங்குமுறை அதிகாரிகள் தாக்கல் செய்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பங்கின் விலை எதிர்காலத்தில் குறையும் என்று கணித்து, இல்லாத பங்குகளை முதலில் கடன் வாங்கி விற்றுவிட்டு, விலை குறைந்த பிறகு அதை மீண்டும் வாங்கிக் கடனை அடைக்கும் முதலீட்டு உத்தி ‘ஷார்ட் செல்லிங்’ (Short selling) என்று அழைக்கப்படும்.

விலை வீழ்ச்சியில் லாபம் ஈட்ட, இல்லாத பங்குகளை விற்று, பின்னர் மலிவான விலையில் வாங்கித் திருப்பித் தரும் இந்த உத்தியைக் கையாண்டதற்காக நாட்டின் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செக்யூரிட்டீஸ் ஃபியூச்சர்ஸ் ஆணைக்குழு (எஸ்எஃப்சி), ஜிஐசி உள்ளிட்ட ஆறு சொத்து மேலாளர்கள், பத்திரங்கள் நிறுவனங்களுக்கு மொத்தம் 3.97 பில்லியன் வோன் அபராதம் விதித்ததாகக் கொரியா டைம்சில் ஜனவரி 19ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்தி தெரிவித்தது.

ஜிஐசி தொடர்பான அந்தச் சம்பவம் 2022ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. 666.1 மில்லியன் வோன் மதிப்புள்ள சொகுசு ஹோட்டல் குழுமமான ஹோட்டல் ஷில்லாவின் 8,415 பங்குகளின் விற்பனை ஆணை தொடர்பானது.

அந்த சம்பவத்திற்கு ஜிஐசியின் மூன்றாம் தரப்பு முகவரின் செயல்பாட்டுக் குறைபாடுகள், பிழைகள், ஒப்பந்த விதி மீறல்கள் காரணம் என்று ஜிஐசி வியாழக்கிழமை (ஜனவரி 22) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

முகவர் நிறுவனம், இதற்கு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டதுடன் ஜிஐசி சார்பாக அந்த அபராதத்தை செலுத்தியுள்ளது. அது தென்கொரிய ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்