டோவரில் புதிய வீடுகளுக்கு வழிவிடும் ‘ஐடிஇ’ கட்டடங்கள்

டோவரில் புதிய வீடுகளுக்கு வழிவிடும் ‘ஐடிஇ’ கட்டடங்கள்

2 mins read
cb586585-9dd2-48a4-bfe9-9ac68f093a08
டோவர் டிரைவில் அமைந்துள்ள முன்னாள் ஐடிஇ தலைமையகத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இடிக்கவிருக்கிறது. அந்த வளாகத்தில் சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் செயல்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

டோவர் டிரைவில் உள்ள முன்னாள் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (ஐடிஇ) தலைமையகமும் டோவர் வளாகமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் இடிக்கப்படவிருக்கின்றன.

அங்குப் புதிய வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு தளங்களையும் இடிக்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கு நகர மறுசீரமைப்பு ஆணையம் சென்ற மாதம் (ஆகஸ்ட் 2025) 14ஆம் தேதி அனுமதியளித்தது.

ஐடிஇ தலைமையகம் 1995ஆம் ஆண்டுமுதல் 2012 வரை, எண் 10 டோவர் டிரைவில் செயல்பட்டது. ஐடிஇ டோவர் வளாகம், எண் 20 டோவர் டிரைவில் 1995ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை இயங்கியது.

ஐடிஇ வெளியேறிய பிறகு, சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் டோவர் டிரைவ் வளாகத்தைப் பயன்படுத்தின.

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தற்போது அங்குள்ள தற்காலிக வகுப்பறைகளை இடித்துவருகிறது.

ஆணையத்தின் வரைவுப் பெருந்திட்டம் 2025இன்படி, 5.9 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலத்தின் பெரும்பகுதி வீடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய வீடுகள் 3.8 ஹெக்டர் நிலப்பரப்பில் அமையவிருக்கின்றன. அந்த நிலப்பரப்பு ஏறக்குறைய ஐந்து காற்பந்துத் திடல்களுக்குச் சமமானது.

பெருந்திட்டம், நாட்டின் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டியாக அமையும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அது நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடிஇயின் முன்னாள் வளாகங்கள் குறித்த கேள்விக்கு இம்மாதம் 10ஆம் தேதி வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பதில் தந்தது.

“வளாகங்களை இடிக்கும் பணிகள் அரசாங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும். அவை 2026ஆம் ஆண்டின் முதற்பாதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” எனக் கழகம் குறிப்பிட்டது.

புதிதாக வரவிருக்கும் டோவர்-மெட்வே அக்கம்பக்கத்தின் ஒரு பகுதியான 3.8 ஹெக்டர் நிலப்பரப்பில் 1,300க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டமுடியும் என்று சொத்து வல்லுநர்கள் கூறுகின்றனர். வரைவுப் பெருந்திட்டத்தை ஆணையம் ஜூன் மாதம் வெளியிட்டது. புதிய அக்கம்பக்கத்தின் முதற்கட்டமான ஆங்கிலோ-சீன பள்ளிக்கும் (தன்னாட்சி) ஒன்-நார்த்துக்கும் இடைப்பட்ட பகுதியில் 6,000 கழக வீடுகளும் தனியார் வீடுகளும் அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கட்டத்தின் முதல் தொகுதி வீடுகள் டோவர் ரோட்டில் உள்ள 1.35 ஹெக்டர் நிலப்பரப்பில் அமையக்கூடும் என்றும் அவை வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 625 தனியார் வீடுகளையும் 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் வர்த்தக வசதிகளையும் நிறுவமுடியும்.

புதிய அக்கம்பக்கம் உருவாகும்போது கூடுதலான தொடக்கப்பள்ளிகள் தேவைப்படக்கூடும் என்று சொத்து நிபுணர்கள் கருதுகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் பெரும்பாலானவை தொடக்கநிலைக்குப் பிந்தியவை என்பதே அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்