த பின்னக்கல் அட் டக்ஸ்டன் (The Pinnacle@Duxton) குடியிருப்பில் உள்ள ஐந்தறை வீடு ஒன்று S$1.63 மில்லியனுக்கு விற்பனையாகியுள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (HDB) ஐந்தறை வீடுகளில் இதுவே ஆக அதிக விலையில் விற்பனையானதாகும்.
புளோக் 1B கென்டோன்மென்ட் ரோட்டில் உள்ள இந்த வீடு கடந்த வாரம் விற்கப்பட்டதாக எட்ஜ்புராப் (EdgeProp) சொத்துச் சந்தைத் தளம் தெரிவித்தது.
இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 2025-ல் இதே குடியிருப்பில் அமைந்திருந்த மற்றொரு ஐந்தறை வீடு, அப்போது ஆக அதிக விலையான S$1.6 மில்லியனுக்கு விற்கப்பட்டிருந்தது.
புதிதாக விற்கப்பட்ட இந்த வீடு 43ஆவது மாடிக்கும் 45ஆவது மாடிக்கும் இடையே அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 1,130 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ள இந்த வீட்டின் விலை, ஒரு சதுர அடிக்குக் கிட்டத்தட்ட S$1,442 என மதிப்பிடப்பட்டுள்ளது.
2011-ல் தொடங்கிய இதன் குத்தகை முடிவடைய இன்னும் கிட்டத்தட்ட 84 ஆண்டுகள் எஞ்சியுள்ளன.
நகர மையத்தில் அமைந்திருப்பது, எளிதான போக்குவரத்து வசதி, தனித்துவமான வடிவமைப்பு, மில்லியன் வெள்ளி மதிப்பிலான மறுவிற்பனைச் சாதனை ஆகியவற்றின் காரணமாகத் த பின்னக்கல் அட் டக்ஸ்டன், சிங்கப்பூரின் முக்கியப் பொது வீடமைப்புத் திட்டங்களில் ஒன்றாக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வருகிறது.
இந்த விற்பனை மீண்டும் ஒருமுறை த பின்னக்கல் அட் டக்ஸ்டன் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.

