தெம்பனிஸ் வீட்டில் தீ: நால்வர் மருத்துவமனையில்

தெம்பனிஸ் வீட்டில் தீ: நால்வர் மருத்துவமனையில்

1 mins read
9f6bebca-b580-4900-a9b0-83dfa7be172d
தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் தீ பற்றிக்கொண்டது என்று சந்தேகிக்கப்படுகிறது. - படம்: ஷின்மின் நாளிதழ்

தெம்பனிஸ் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) நடந்த இரண்டாம் தீச் சம்பவத்தில் தனிநபர் நடமாட்டச் சாதனம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

புளோக் 898 தெம்பனிஸ் ஸ்திரீட் 81ல் உள்ள 12 ஆவது மாடி வீட்டில் தீ விபத்து குறித்த தகவல் அதே நாளில் இரவு11.30 மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தனர்.

தீயில் கிளம்பிய புகையினால் பாதிக்கப்பட்ட நால்வர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த கட்டடத்திலிருந்து 60 குடியிருப்பாளர்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் தனிநபர் நடமாட்டச் சாதனம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.

வீட்டின் உள்ளே வரவேற்புப் பகுதியில் அதிகம் பரவியிருந்த தீ, எஸ்சிடிஎஃப் படையினரால் அணைக்கப்பட்டது. அதிலிருந்து ஏறத்தாழ இரண்டு மணிநேரத்துக்கு முன்னதாக அதே தெம்பனிஸ் வட்டாரத்தின் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் மற்றொரு தீச் சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் தரப்பினரிடம் தனிநபர் நடமாட்டச் சாதனங்களில் சட்டத்துக்கு புறம்பாக மின்னூட்டிகளில் உபரி பாகங்கள் மாற்றப்படுவதும் பாதுகாப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டிகளைப் பின்பற்றாமல் இருப்பதும் அவற்றில் தீ பிடிக்கக் காரணங்களாக அமைகின்றன.

கடந்த 2025ஆம் ஆண்டில் 44 தீ விபத்துகள் அதுபோன்ற சாதனங்களில் நடந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்