சுவா சூ காங் வீவக வீட்டில் தீ விபத்து; ஒருவர் மரணம்

முன்னெச்சரிக்கையாக 70 பேர் வெளியேற்றம்

சுவா சூ காங் வீவக வீட்டில் தீ விபத்து; ஒருவர் மரணம்

2 mins read
0259b990-cc09-4254-8b9c-4c42f726a153
சுவா சூ காங் நார்த் 5ல் உள்ள புளோக் 763இல் வியாழக்கிழமை (மார்ச் 19) தீ விபத்து நேர்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3
Google News Preferred Icon

சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடொன்றில், வியாழக்கிழமை (மார்ச் 19) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மாண்டார்.

தீச்சம்பவம் தொடர்பாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

“அதிகாலை 3 மணிவாக்கில் சுவா சூ காங் நார்த் 5இல் உள்ள புளோக் 763இல் தீச்சம்பவம் ஏற்பட்டதாகாத் தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்தோம்,” என்று குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

“14வது மாடியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் உள்ள படுக்கை அறையில் தீ எரிந்துகொண்டிருந்தது. இரண்டு தண்ணீர்க் குழாய்களின் உதவியோடு தீ அணைக்கப்பட்டது,” என்று அதிகாரிகள் கூறினர்.

தீயணைப்பு நடவடிக்கையின்போது வீட்டிலிருந்து ஓர் ஆடவர் மீட்கப்பட்டார். பின்னர் அவர் மாண்டதாகச் சம்பவ இடத்தில் அறிவிக்கப்பட்டது.

தீ விபத்து நேர்ந்த வீட்டிற்கு அதிகாரிகள் செல்வதற்கு முன்னரே அந்த வீட்டிலிருந்த மற்றொருவர் வெளியேறினார். அவர் புகையைச் சுவாசித்ததால் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 70 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

அன்பான குடும்பம்

சம்பவ இடத்திற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் 8.30 மணிவாக்கில் சென்றனர். அப்போது அங்குக் காவல்துறையின் வாகனங்கள், தீயணைப்பு வாகனம், குற்ற விசாரணைப் பிரிவின் வாகனம் முதலியவை இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

13வது மாடியில் வசிக்கும் திருவாட்டி சோஃபியா லீயும் அவரது குடும்பத்தினரும் காவல்துறை அதிகாரிகள் வந்து தகவல் கொடுத்த பிறகே வீட்டைவிட்டு வெளியேறியதாகக் கூறினர்.

“தீ 15வது மாடியில் ஏற்பட்டதாக முதலில் நினைத்தோம். பிறகுதான் அது 14வது மாடியில் ஏற்பட்டதை உணர்ந்தோம்,” என்றார் 61 வயது திருவாட்டி லீ.

“பாதிக்கப்பட்டவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அங்கு குடிபுகுந்தனர். அந்த வீட்டில் 60 வயது மதிக்கத்தக்க தாயும், 20 வயதுடைய ஒரு மகளும் ஒரு மகனும் வசித்து வந்தனர். அவர்கள் அன்பான குடும்பத்தினர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்