ஈசூன் பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
புளோக் 510பி, ஈசூன் ஸ்திரீட் 51 என்ற முகவரியில் உள்ள வீடமைப்புக் கட்டடத்தின் இரண்டாம் மாடியில் ஏற்பட்ட தீ குறித்து அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது.
காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் பாதுகாப்பு கருதி, ஏறத்தாழ 50 குடியிருப்பாளர்களை அந்தக் கட்டடத்தில் இருந்து வெளியேற்றின. ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று எஸ்சிடிஎஃப் உறுதிப்படுத்தியது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பாகவே குடியிருப்பாளர்கள் தீயை அருகில் இருந்த தீயணைப்பானைப் பயன்படுத்தித் தீயை அணைத்துவிட்டனர் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
விசாரணை தொடர்கிறது. இரு குடியிருப்பாளர்கள் சேர்ந்து வீட்டிலிருந்த மற்றொரு குடியிருப்பாளரைக் காப்பாற்றியுள்ளனர் என்று நீ சூன் (Nee Soon) குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹுய் யிங் தமது ஃபேஸ்புக் பதிவில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ரஸ்மி, ஃபுர்சான் என அந்த இருவரின் பெயர்கள் பதிவில் குறிப்பிடப்பட்டன. நீ சூன் நகர மன்றக் குழுவின் ஆதரவுக்கு திருவாட்டி லீ நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நகர மன்றக் குழு தொடர்பில் இருந்து ஆதரவு நல்கும் எனவும் அவர் கூறினார்.

