தேசிய படகோட்ட வீரரான 24 வயது ஜோவி ஜேடன் கலைச்செல்வன் நீரின் விசையை எதிர்த்து படகோட்டுவதுபோல வாழ்வின் சவால்களைப் போராடிக் கடப்பவர்.
2022ஆம் ஆண்டு வியட்னாமில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் படகோட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், 2024 தென்கிழக்காசிய போட்டிகளில் நெடுந்தூரப் படகுப் போட்டி இடம்பெறாததால் பங்கேற்கவில்லை.
சிறுவயது முதல் ஜோவியின் வாழ்க்கை போராட்டமாகவே இருந்து வந்துள்ளது.
2017ஆம் ஆண்டு செக் குடியரசில் படகோட்டப்போட்டியில் பங்கேற்று நாடு திரும்பியபோது தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.
அதே ஆண்டு அவரது தந்தை மருத்துவமனையில் மரணித்தது தெரியாமலேயே 16 வயதில் ‘ஓ’ நிலை ஆங்கில மொழிப் பாடத் தேர்வை எழுதினார்.
மகனின் தேர்வு பாதிக்கக்கூடாது என்பதால் தேர்வு முடிந்து வீட்டுக்கு அழைத்து வரும்போதுதான் தாயார் அத்துயரச் செய்தியைப் பகிர்ந்தார்.
ஐரோப்பாவில் நடந்த போட்டியில் பங்கேற்ற களைப்பு, தேர்வுக்குத் தயாராகும் பதற்றம், தந்தையின் உடல்நலத்தால் பாதிப்படைந்துள்ள குடும்பம் என பல இடர்களில் அவர் மனம் தள்ளாடியது. ஜோவிக்கு பெரும் ஊக்கமாக இருந்தவர் அவரது தந்தை.
முன்னாள் விமானப் பணிப்பெண்ணான தாயார் நவின் சந்து, 57 பிள்ளைகளை வளர்க்க பின்னர் வேலைக்குச் செல்லவில்லை. ஜோவிக்கு இரு தம்பிகளும் ஒரு தங்கையும் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
23 வயதாகும் ஒரு தம்பி, பெருமூளை வாதத்தால் மருத்துவமனையில் நிரந்தரமாக தங்கவேண்டியுள்ளது. மற்றொரு தம்பி தேசிய சேவை ஆற்றுகிறார். தங்கை தொழில்நுட்பக் கல்லூரியில் பயில்கிறார்.
சேமிப்பைக் கொண்டு குடும்பத்தை நடத்திவரும் தயாருக்கு உதவ, ஜோவி பகுதிநேரமாக பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். உயர்நிலை, தொடக்கக் கல்லூரியில் படித்தபோதும் தேசிய சேவையின்போதும் படகோட்டம், பயிற்சி வகுப்பு, குடும்பத்துக்கு ஆதரவு என பலவற்றையும் கையாள வேண்டியிருந்தது.
படகோட்டம் வழங்கிய கடினமான பயிற்சி, விடாமுயற்சி போன்ற பண்புகள், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகளைச் சாதனைகளாக மாற்றிட ஜோவிக்கு இன்றளவும் உதவுகின்றன.

