ஜகார்த்தா: எரிபொருள் விலை ஏற்றத்தால் இந்தோனீசியாவின் ஜாவா தீவில் உள்ள கடலோர நகரில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது.
தொடர்ந்து அதிகரித்துவரும் எரிபொருள் விலைகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மீனவர்கள் கருதுகின்றனர்.
எரிபொருளுக்கு அரசாங்கம் வழங்கும் மானியம் தொடர்ந்தபோதிலும் தொழில்துறை டீசல் போன்ற மானியத்திற்கு உட்படாத எரிபொருளின் விலை, கடந்த மாதத்திலிருந்து 30,000 ரூப்பியாவுக்கு (S$2) உயர்ந்துவிட்டது. விலை ஏற்றத்திற்கு முன்புவரை ஒரு லிட்டர் டீசல் 14,000 ரூப்பியாவாக இருந்தது.
அந்த விலையேற்றம் காரணமாக மத்திய ஜாவாவில் உள்ள பட்டி என்னும் கடற்கரை நகரில் கடந்த வாரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். தங்களது படகுகளுக்குத் தேவைப்படும் டீசலின் விலையைக் குறைக்கக் கோரிக்கை விடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டி நகரைச் சேர்ந்த மீனவரான ஸென் ஸென் அல் விஜய்னி தம்மால் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல முடியவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார். மீன்பிடிப் படகுக்கான நடைமுறைச் செலவில் 70 விழுக்காடு எரிபொருளுக்கேச் செல்வதால் தமது படகின் உரிமையாளர் அதனை மீன்பிடிக்கத் தரவில்லை என்றார் அவர்.
நடைமுறைச் செலவுகள் மிகவும் அதிகம் என்பதால் தமது குடும்பத்திற்குப் போதுமான வருவாயை ஈட்டித் தரமுடியாது. அதற்குப் பதில் வேலை செய்யாமல் இருந்துவிடலாம் என்று அந்த 40 வயது மீனவர் கூறினார்.
முன்னதாக, புவிசார் அரசியல் சூழலில் எரிபொருள் விலை உயர்வு தவிர்க்கமுடியாதது என்று இந்தோனீசிய அரசாங்கத்தின் எண்ணெய், எரிவாயு நிறுவனமான பெர்த்தாமினா கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தது. மத்திய கிழக்குப் போரால் உலகளாவிய எண்ணெய் விலைகள் ஏற்றம் கண்டதாகவும் அது தெரிவித்திருந்தது.

