சிங்கப்பூரில் சென்ற ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் பிடாடாரி குடியிருப்புப் பகுதியின் இறுதி நான்கு வீடமைப்புத் திட்டங்களும் அடங்கும்.
பார்க்எட்ஜ்@பிடாடாரி, பார்க்வியூ@பிடாடாரி, பார்ட்லி பீக்கன், பார்ட்லி கிரீன்ரைஸ் ஆகியவை அந்த நான்கு திட்டங்களாகும்.
2015ஆம் ஆண்டு இறுதியில் பிடாடாரி வட்டாரத்தில் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) வீட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிடாடாரி குடியிருப்புப் பகுதியின் அனைத்துப் பொது வீடமைப்புத் திட்டங்களும் நிறைவடைவதை இது குறிக்கிறது.
மொத்தமாக 93 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அந்தக் குடியிருப்புப் பகுதியில் 12 பொது வீடமைப்புத் திட்டங்களின்கீழ் 8,872 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பார்க்எட்ஜ்@பிடாடாரி திட்டத்தின்கீழ் மொத்தம் 476 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. சென்ற ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி அவற்றில் 448 வீடுகள் விற்கப்பட்டுள்ளன. விற்பனையான வீடுகளில் 438க்கு உரிமையாளர்கள் சாவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பார்க்எட்ஜ்@பிடாடாரி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் ஐந்து ஆண்டுகள் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டம் கொண்டவை.
பார்க்எட்ஜ்@பிடாடாரி குடியிருப்புப் பகுதியைப் பார்வையிட்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், இந்தப் பகுதி எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்தப் பகுதியில் எந்தெந்த வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் போன்ற அம்சங்களில் குடியிருப்பாளர்களின் தேவைகள் கருத்தில் கொள்ளப்பட்டதாகச் சொன்னார்.
பிடாடாரி குடியிருப்பின் வரலாற்றைக் கதைப்பலகைகள் மூலம் விவரிக்கும் வகையில், பூங்காவில் இடம்பெறும் மரபுடைமை நடைபாதை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முழுமையாகத் திறக்கப்படும்.
சிங்கப்பூரின் பழைமையான இடுகாடுகளில் ஒன்றான பிடாடாரியின் வரலாற்றை நினைவுகூரும் நினைவுத் தோட்டமும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

