போதைப்பொருள் குற்றங்களின் தொடர்பில் 7 வெளிநாட்டு ஊழியர்கள் கைது

2 mins read
4ae2ad35-4edb-4f94-9c25-d9d274d28cde
ஜூரோங் வெஸ்ட், சிலேத்தார், சுவா சூ காங் வட்டாரங்களில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் தொடர்பில் வெளிநாட்டு ஊழியர்கள் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இம்மாதம் (டிசம்பர் 2025) 8ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் மூன்று விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் அவர்கள் பிடிபட்டனர்.

கைதானவர்கள் அனைவரும் பங்ளாதே‌‌‌ஷைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 20க்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, காவல்துறை, குடிநுழைவு-சோதனைச்சாவடிகள் ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம், சிங்கப்பூர்ச் சுங்கத்துறை, மனிதவள அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டாக இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

போதைப்பொருள் குற்றங்கள், மற்ற குற்றச்செயல்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் அவையும் அடங்கும் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சனிக்கிழமை (டிசம்பர் 13) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

டிசம்பர் 8ஆம் தேதி, ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியொன்றில், 25 வயது ஆடவர் போதைப்பொருள் உட்கொண்ட சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டார்.

அதற்கு அடுத்த நாள், சிலேத்தாரில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில், இருவர் பிடிபட்டனர். 23 வயது ஆடவர், போதைப்பொருள் உட்கொண்டதாகவும் 29 வயது ஆடவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்பட்டதால் கைதாயினர்.

29 வயது ஆடவர் வசித்த இடத்திலிருந்து ஐஸ் (மெத்தம்ஃபெட்டமைன்), பாராஃபெர்னலியா போன்ற போதைப்பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

20க்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட எஞ்சிய நான்கு ஆடவர்கள், டிசம்பர் 11ஆம் தேதி, சுவா சூ காங்கில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் சிக்கினர்.

அவர்களில் 24 வயது ஆடவரிடமிருந்து ஐஸ், பாராஃபெர்னலியா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சந்தேக நபர்களின் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த புலனாய்வு தொடர்கிறது.

போதைப்பொருள் குற்றச்செயல்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைவரின் பாதுகாப்பையும் நலன்களையும் காக்கத் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருப்பதாகவும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்