மடைமாற்றம்

மடைமாற்றம்

10 mins read
fbcc0a6e-a4c5-4cd3-9782-b1f2b0e05c50
ஆ.விஷ்ணு வர்தினி - ஆ.விஷ்ணு வர்தினி

டப்... டப்... டப்... நல்ல மழை நாள். தூரத்தில் மழை பெய்துகொண்டிருக்கின்றது.

நான் மரமாக இருந்த காலத்தில் நான் இலை சிலிர்த்துக் கொண்டாடிய மழை. என் அணுக்கள் எல்லாம் பூரிக்க அசைந்து அசைந்து ஆட வைத்த மழை. இப்போதும் என் அணுக்கள் அசையத் துடிக்கின்றன.

ஊழிக் காற்று அடித்து ஓய்ந்த பின், தொடர்ந்து மென் காற்று உரசிச் செல்வது போன்ற ஓர் உணர்வு அது. அக்காலத்தில் மழை அதிகம் கொட்டும்போதெல்லாம் திட்டுவேன். இன்னும் கொஞ்சம் கொஞ்சி இருக்கலாம். இன்னும் கொஞ்சம் நனைந்திருக்கலாம். அதன்கீழ் துவண்டிருந்தாலும் பரவாயில்லை. அப்போது பயமாய் இருந்த அதுவே இப்போதெல்லாம் வா வா என அழைக்கின்றது. முன்பெல்லாம் மழைக்காலத்தில் சிலசமயம் என் மேனியிலிருந்து வண்ண வண்ண பிம்பங்கள் பல தோன்றும். அத்தருணத்தில் நான் மிக அழகாக இருந்திருக்க வேண்டும். மழைத்துளிகளில் மண்ணிலிருந்து உறியும் நீருக்கு இணையான மண்வாசனை இருக்கும். அதோடு, நிறைய புளிப்பும் கொஞ்சம் இனிப்பும்.

என் எதிரே உள்ள திடல்தான் இப்பகுதிக்கான மழையை உருவாக்குகிறது. அதன் அழகான வெளிர்ப் பச்சை நிறப் புற்கள் நீண்டு அப்படியும் இப்படியுமாக ஆடும்போது மழை அழைக்கப்படுகிறது என்று கண்டுபிடித்தேன்.

மழை என்மேல் பட்டு எத்தனை ஆண்டுகள் ஆயின என்றே மறந்துவிட்டேன். அசைக்க முடியாதபடி கூரையின்கீழ் தரையோடு என்னை ஆணி அடித்துவிட்டார்கள். கூடிய விரைவில் மனிதர்களுக்குத் தலை முடி வெட்ட வெட்ட வளர்வதுபோல எனக்கும் இலை முளைக்கும், வேர்கள் ஊன்றும். நான் மீண்டும் மரமாவேன்.

இப்போதைய வாழ்க்கை சற்றுக் கடினமாக உள்ளது. காலம் புரியவில்லை. சூரியன் என்மீது படாவிட்டாலும் அதனுடைய வெப்பத்தை மனிதர்கள் எனக்காகக்கொண்டு வருகிறார்கள்.

எப்போதும் என் முதுகின்மீது உட்கார்ந்து செல்லும் நீல மூக்குக்கண்ணாடி அணிந்த பெண் அவளின் ருசியற்ற நீர்த்துளிகளால் என்னை நனைக்கிறாள். அவை மிகவும் உப்புக் கரிப்பவை. அவளின் பெயர் பேபி. பேபியிடம் எப்படிச் சொல்வது, எனக்கு வேண்டியது மழைத்துளிகள்தான் என்று? 

***

பேருந்தில் இரண்டாம் தளத்தில் அமர்வது வியாஷுக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் முதல் இருக்கைகளில்தான் அமரவேண்டும் என்பான். விம்லாவுக்கு வானவில்கள் என்றால் உயிர். இதனால் வியாஷ், தண்ணீர் நிரம்பிய தனது பிளாஸ்டிக் வாட்டர்போட்டலைப் பேருந்து முன்சன்னல்வழி வழியும் சூரிய ஒளிக்கு எதிரே காண்பித்து குட்டி குட்டி வானவில்களை உருவாக்கிக் காட்டுவான். அனைத்து வானவில்களையும் விம்லா தமது சிறு நோக்கியா கைப்பேசியில் படம்பிடித்து வைத்துக்கொண்டாள். பாவம், அவ்வானவில்களின் பாதி நிறங்களையோ கைப்பேசி விழுங்கிக்கொண்டு ஏப்பங்கள்போல் வெள்ளை ஆரஞ்சு திட்டுக்களைக் காட்டும். இருந்தாலும் விம்லாவின் கண்ணுக்கு அவை அழகானவையே.

கைப்பேசியை எதற்கு எடுத்தாள் என்றே மறந்து அன்று சன்னலின் பக்கத்தில் அமர்ந்திருந்த விம்லா காற்றில் அசைந்து சன்னலை உரசி சென்ற இலைகளை ஆராய்ந்துகொண்டிருந்தாள். பள்ளிக்குச் செல்லும் வழியில் தினமும் கடந்து செல்லும் இம்மரங்களின் இலைகளை இவ்வளவு அருகில் கண்டதில்லையே என ஆச்சரியப்பட்டாள்.

அடைமழை சன்னலைத் தட்டிக்கொண்டே இருந்தது. அவளின் காதில் ஒற்றை இயர்பீஸில் வியாஷுக்குப் பிடித்த ஓர் ஆங்கிலப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சட்டென்று இலைகளைத் தொட கைநீட்டிய விம்லாவின் விரல்கள் கண்ணாடி சன்னலோடு மோதின. ‘ப்ச்’ என நொந்துகொண்டாள். பெருமூச்சோடு சன்னலில் சாய்ந்துகொண்டு மழையை ரசித்தாள்.

விரைவுச்சாலை தாண்டியவுடன் முதல் நிறுத்தத்தில் விம்லா இறங்கினாள். இறங்கியவுடனேயே அவள் ரசிக்கும் ஈரவாசனை அவளின் கவனத்தை ஆட்கொண்டது.

ஈரமான மணல், புதிதாய் வெட்டிய புல்வெளி, இவற்றின் மணம். அங்கிருந்து ஓர் ஐந்து நிமிடம் நடந்தாக வேண்டும். மழையில் நனைந்த குறுக்குப் பாதைகளின் சேறும் சகதியும் விம்லாவின் வெள்ளைக் காலணிகளை எல்லாக் கோணத்திலிருந்தும் தாக்கின. சாதாரண ஒரு நாளில் விம்லா அப்பாதையில் நடந்திருக்கவேமாட்டாள். மழை முழுதாக நிற்க நிறுத்தத்திலேயே காத்திருந்திருப்பாள்.

இன்றோ, அவளின் கால்கள் பழகிப்போன திசையில் நடந்தன. ஓர் அடுக்குமாடியில் கீழ்த்தளத்தை வந்தடைந்தாள். சிறிது தூரத்தில் ஒரு மர பெஞ்ச் இருந்தது. அதைப் பார்த்த கணத்தில் அவளின் இதயம் கட்டுப்பாடின்றித் துடித்தது. காதுவரை ஒலித்த அந்த ஒலியை அச்சத்துடன் கேட்டபடியே, அதிலிருந்து பார்வையை நீக்காமல் குடையை மடக்கிக்கொண்டு அடிமேல் அடிவைத்து அதை நோக்கி நடந்தாள். சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் பெருமரமாக நின்றிருந்த அதை வெட்டிவிட்டார்கள். அதன் அடிப்பகுதியைச் செதுக்கி, வடவடிவமைத்து நீள இருக்கையாக போட்டிருக்கிறார்கள். இருக்கையாகி இருக்கும் அவள் பார்த்து வளர்ந்த மரத்தில் அவள் அமர்ந்தாள். இதயத்துடிப்பு இன்னும் அதிகரித்து, சுவாசிப்பது கடினமானது.

இன்றும் வியாஷ் இங்கு இல்லை. அவன் அங்கு இருக்கமாட்டான் என்றும் அவளுக்குத் தெரியும். ஆனால், என்றைக்காவது ஒருநாள் அவ்விடத்தில் அவளுக்காகக் காத்திருப்பான் என விம்லாவின் மனம் எதிர்பார்க்கும். கடந்த ஆறு மாதங்களில் குறைந்தபட்சம் இருபது முறையாவது இந்த இருக்கையை நாடி அவள் வந்திருப்பாள். இருட்டிய பின்னர் அம்மா அவளைக் கைப்பேசியில் அழைக்கும்வரை அங்கேயே காத்திருப்பாள். இன்றும் அவன் வரவில்லை.

பழகிப்போன கண்ணீர் அறிவிப்பில்லாமல் தேங்கிக் கனத்தது. அது சொட்டியபோது அவனை மீட்க என்னவெல்லாம் சொல்ல வேண்டுமென மனதில் ஒப்பித்த ஒத்திகைகளும் அதில் கரைந்தன. 

***

டிக் டிக் டிக். பேபியின் நீர்த்துளிகள் விழுகின்றன. மழைத்துளிகளின் சத்தம் வேறு. கனம் வேறு. உப்புக் கரிக்கின்றது. என் அணுக்கள் முடங்குகின்றன. முன்பெல்லாம் இவள்மீதும் இவளின் நண்பர்மீதும் சாய்வேன். அவனின் பெயரும் பேபிதான். அப்போது நீண்ட நெடிய மரமாக நின்றிருந்தேன். அழகான வண்ண வண்ணப் பறவைகள் என்மீது வந்தமரும். இப்போதெல்லாம் இவர்கள்தான் சாய்கிறார்கள், அமர்கிறார்கள்.

வழக்கத்துக்கு மாறாக டப்பென்று என்மீது இப்போது பேபி உட்கார்ந்ததும் ஒருகணம் திடுக்கிட்டேன். அவளின் கனத்தால் அல்ல. எப்போதும் என்னைப் பாதுகாப்பதுபோல, பட்டுத்துணி படர்வதுபோல மெல்ல அமர்வாள். இன்று எதிர்பார்க்காத அளவுக்கு டப்பென்று அமர்ந்ததன் காரணம் தெரியவில்லை. இவளை இப்போது எனக்கு அறவே பிடிக்கவில்லை.

முன்னர் இவளும் இவளின் நண்பனும் என்மீது அமர்ந்து கைகளைக் கோத்துக்கொண்டு மணிக்கணக்காகப் பேசுவார்கள். இவளும் இவளின் நண்பனும் பாடல் பாடி என்னை மகிழ்விப்பார்கள். அதில் எனக்கு மிகப் பிடித்தது It Will Rain என்ற ஆங்கிலப் பாடல்.

முன்னர் ஒவ்வொரு காலையும் என்மீது வந்தமரும் ஒரு பாட்டி கொண்டு வரும் வானொலியின் இரைச்சலுக்கு இவர்களின் பாடல் மிக இனிமையாக இருக்கும். என்றாலும் இவர்கள் சிலசமயம் ராகம், தாளம் எதுவும் இன்றி உற்சாகத்தில் உரத்த குரலில் பாடும் பாடல்தான் எனக்கு மிக மிகப் பிடிக்கும். அப்படிப் பாடும்போது இரு பேபிக்களின் கண்களும் அகன்றிருக்கும். களிப்பின் உச்சியில் போட்டி போட்டுக் கத்துவார்கள். அப்பாடலின் வரிகள் மாறிக்கொண்டே இருக்கும். “We are over,” எனும் வரிதான் கடைசி வரி. ஒருநாள் அந்தப் பாடலுக்குப் பின் போனவன்தான். அந்த ஆண் பேபி இந்த இடத்துக்கு இன்றுவரை வரவேயில்லை.

ஆ! என்மீது நீர்த்துளிகள் விழுகின்றன... இல்லை, இது மழைத்துளி இல்லை. உப்பு நீரும் இல்லை. அணுக்களை அலற வைக்கும் ஒரு தகர வாசனை அடிக்கிறது. பெண் பேபி தன் கைகளை ஒன்றாக கோத்துக்கொள்கிறாள். எனக்கு இது பிடிக்கவே இல்லை. 

***

“விம்லா!” யாரோ அழைப்பதைக் கேட்ட விம்லா திடுக்கிட்டாள். சேறாகிய ஷார்ட்ஸ், பள்ளிச் சட்டையோடு லியோ நின்றுகொண்டிருந்தான். வேகமாக கண்ணீரை அடக்க கண்களைச் சிமிட்டிக்கொண்டே, “ஹாய் லியோ? எப்படி இருக்கே?” என்றாள். லியோ அவளின் பக்கத்தில் அமர்ந்தான்.

கண்ணீரை அடக்கிக்கொண்டு சமாளிக்கும் பணியில் விம்லா பேச, தான் எங்கு படித்துக்கொண்டிருக்கிறான், தொடக்கப்பள்ளி நண்பர்களைப் பார்த்து எவ்வளவு நாளாகிறது, பாட்டி இறந்துவிட்டார் என்று லியோ கடந்துவிட்ட காலத்தை நிரப்பிக் கொண்டிருந்தான்.

“லிஹூவா பாட்டி இறந்துவிட்டாரா?” விம்லா இடைமறித்துக் கேட்டாள். அவள் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்தில், லியோவின் பாட்டி அவ்வப்போது பள்ளி முடியும்போது அவனை அழைக்க வருவார். உடல் முழுக்க பச்சை நரம்புகள் தெரியும் அளவுக்கு சுருக்கங்கள் இருந்தாலும், லியோவை ஒரே பிடியில் தூக்கி அணைத்துக்கொள்வார். லியோ சற்று நேரம் மௌனமாக இருந்தான்.

மழைச் சத்தம் துல்லியமாகக் கேட்டது. எங்கிருந்தோ வந்த ஓர் ஆரஞ்சுநிறப் பூனை லியோவின் மடிமீது ஏறியது. விம்லா சற்று நகர்ந்துகொண்டாள். அப்பூனை மிக அழகாகவே இருந்தது. அதனைக் கொஞ்சவேண்டும் என ஆசை ஏற்பட்டாலும் விம்லா அச்சப்பட்டாள். மழையில் நனைந்து சற்று வித்தியாசமாக அது காட்சியளித்தது. லியோவோ “லிஹுவா” என அழைத்து அப்பூனையோடு விளையாடினான். 

***

மியாவ்... மியாவ்... லிஹூவா என்மீது உரசுவது அறுவறுப்பாக உள்ளது.

மியாவ்... மியாவ்... எரிச்சல்படுத்தும் விதமாக அது சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறது.

பேபியை விம்லா என்று அழைக்கிறான் இந்தப் பைத்தியக்காரன். இவன் பூனைகளைத் தேடி அலையும் ஒரு பைத்தியக்காரன். தினமும் மாலையில் எதிரே உள்ள திடலுக்குச் சென்று அவற்றுக்கு தீனியும் நீரும் வைப்பான். மியாவ் என்று மட்டுமே சொல்லத் தெரிந்த அவற்றிடம் புலம்புவான்.

***

லிஹூவா லியோவின் ரகசிய நண்பன். பூனைகளுக்கு உணவு வைப்பது பள்ளியில் யாருக்கும் தெரிந்துவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நண்பர்களின் கிண்டல் ஓயாது. ஆண்கள் பள்ளி அவனுக்கு மிகக் கொடூரமாக இருந்தது. இதில் கொடுமை என்னவென்றால் அந்தப் பள்ளிதான் வேண்டும் என முன்னர் அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அதாவது பாட்டி இறப்பதற்கு முன்னர். அதற்கு பிறகு காலமெல்லாம் அம்மா சொல்லிக்கொண்டிருந்து வீட்டை மட்டுமில்லாமல் அவன் வாழ்வையும் நிரப்பியது. “இருக்குறத வெச்சு சந்தோஷப்படுடா. எதையும் கேட்டுக்காத. எதையும் எதிர்பாக்காத. கனவா? அதெல்லா கடவுள் நெனச்சா வேணா நடக்கலாம்.”

தொடக்கப்பள்ளி மூன்றில் சட்டாம்பிள்ளை ஆகியே தீரவேண்டும் என ஆசைப்பட்டபோது அம்மா அப்படிச் சொன்னார். பின்னர் டிஎஸ்ஏ முயற்சியில் தோல்வியுற்றபோதும் இதனைச் சொன்னார். இன்னும் அதையே கூறிக்கொண்டுதான் இருக்கிறார். நல்ல உயர்நிலைப் பள்ளிக்கு சென்றபோதும் அவரின் சொற்கள் தொடர்ந்தன. கண்டிப்பான தொனியில் அவர் ஒருபோதும் சொல்வதில்லை. ஒருவகை களைப்போடுதான் எப்போதும் இருப்பார். அப்படி இருந்தவரையே பாட்டியின் மரணம் உலுக்கியது. 

“என்ன? பூனைக்குப் பாதி சொத்தா? எங்களப் பாத்தா கோமாளி மாறி தெரியுதா? எங்கள ஏமாத்துறியா நீ?” என அம்மா பாட்டியின் உயில் வாசிக்கப்பட்டபோது பொரிந்து தள்ளினார். பாட்டி லிஹூவா 30 ஆண்டுகள் அக்கம்பக்கப் பூனைகளுக்குத் தீனி வைத்த பழக்கத்தாலேயே குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. தாத்தா அவரிடமிருந்து பிரிந்தார். தங்களுடன் வந்து வசிக்குமாறு அம்மா அழைத்தபோது அறையை நிரப்பிய பூனை சாமான்களைப் பார்த்து அப்பாவும் விலகிப் போய்விட்டார்.

ஏதேதோ நடந்தும் பாட்டி பூனைகளை ஒவ்வொரு சாயங்காலமும் தூக்கி கொஞ்சத்தான் செய்தார். அவற்றுக்குத் உணவும் நீரும் வைத்து அண்டைவீட்டாரின் சாபத்தை வாரிக்கட்டிக்கொண்டார். இறந்தபிறகும் இரும்புப்பிடியாக இந்த பூனைக் குடும்பத்தின்மீது கோபத்தை இப்படி ஏவிவிட லிஹூவா பாட்டியால் மட்டுமே முடியும். அதை நினைத்து சிரித்துக்கொள்வான் லியோ.

முதலில் இந்த பணியை அறவே வெறுத்தான். அவன் அடுக்குமாடியின் கீழ்த்தளத்தின் தூண்களை நோக்கிக் கத்துவான், உதைப்பான். ஆனால், மெல்ல மெல்ல பூனைகள் அவனையும் வசீகரப்படுத்தின. லியோவைத் தாம் பராமரித்த பூனைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு உயிலில் பாட்டி எழுதியிருந்தார். முதன்முதலில் தயக்கத்துடன் அருகில் இருக்கும் பூங்காவுக்கு சென்று தட்டில் உணவை வைத்துவிட்டுக் காத்திருந்தான் லியோ. சிறிது நேரத்தில் பல பூனைகள் அடித்துப்பிடித்துக் கொண்டு சாப்பாட்டுக்காக போட்டிப்போட்டுக் கொள்ளவே, இத்தனை பூனைகள் உள்ளனவா என அவன் வியந்தான்.  மஞ்சளா, பச்சையா, ஆரஞ்சா, இல்லை ஒருவேளை அவன் காலமெல்லாம் தேடிக்கொண்டிருந்த நீலநிற கண்களா? என்ற தேடல் அவனுக்குள் எப்போது வந்தது என்று தெரியவில்லை. தெருப்பூனைகளின் கண்களில் அவன் தன்னைத் தொலைத்துக்கொண்டான்; தோல்வியுற்ற லட்சியங்களை எல்லாம் வென்று நீலநிற பூனைக்கண்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற லட்சியம் அவனிடத்தில் பிறந்தது. 

“இன்னிக்கு மழ வந்துருச்சு. பூனையெல்லா எங்க போச்சுனே தெர்ல. அதான் மழ ஓயுற வரைக்கும் வெயிட் பண்ணி சாப்பாடு வைக்கலாம்னு இருக்கேன்,” என்றான் லியோ.

சற்றுமுன் தான் அழுதுகொண்டிருந்ததை அறவே மறந்தாள் விம்லா. லிஹூவா பாட்டியைப்போல வியாஷிடம் திடமாக இருந்திருக்கவேண்டுமோ என விம்லாவுக்கு தோன்றியது. உன்னோடு செலவழிக்க நேரமில்லை என அவன் கூறியபோது அவள் கண்ணீர்கூட விடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். “பேனாவக் கடிக்காத, ரொம்ப சத்தமா சிரிக்காத,” என்று அவனின் கட்டளைகள் நீள நீள அமைதியாய் இருந்திருந்தாள். அவன் முதுகை திருப்பிக்கொண்டு சென்றபோது உறைந்து நின்றிருந்தாள். “என்னானது என நண்பர்கள் கேட்டபோது ஒன்றுமில்லை, பிரேக் எடுத்திருக்கிறோம்,” என்றாள்.

முன்னர், யாராவது கண்போட்டு விடுவார்கள் என்று வியாஷ் பற்றிய தகவல்களை மறைத்துக்கொண்டிருந்தவள், அண்மைக் காலமாய் வியாஷும் அவளும் மிக மகிழ்ச்சியாக இருந்ததுபோல காட்டிக்கொள்ள அனைத்தையும் செய்தாள். அவளும் அவ்வாறே சிலசமயம் நம்பினாள். அவள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாள். ஒருகுறையும் இல்லை. கைப்பேசி வானவில்லாய், மறை, மறைத்துக்கொள், மறைக்கப்படு என்றே நிறங்களை விழுங்கிக்கொண்டிருந்தாள். 

“இந்த திடல் போனதுக்கப்புறம் பூனையெல்லா எங்க போகும்?” என விம்லா கேட்டாள். லியோ முகம் சுளித்தான். “ஏன்? இந்த திடல் என்னாக போகுது?” என்றான். 

***

ப்ஸ்ஸ். ப்ஸ்ஸ்ஸ். அந்தக் கிழவி இப்படித்தான் பூனைகளைக் கூப்பிடுவாள். “இந்த திடல் ஒருநாள் இருக்காது, நானும் இருக்கமாட்டேன்,” என்று அவள் எப்போதும் சொல்வாள். “கம்போங்கிலேந்து வந்ததுலேந்து அறுபது வருஷம் இங்க வாழ்ந்துட்டேன், ஆனா இப்போ இங்க சொந்தம்னு சொல்லிக்க ஒரு கல்கூட மிச்சமில்லையே,” என்று வருத்தப்படுவாள். கல்லுக்கும் அவளுக்கும் என்ன சொந்தம் இருக்க முடியும்? எனக்கு இங்கு சொந்தம் என சொல்லிக்கொள்ள ஒரு பூனைகூட இல்லையே என சொல்வதுபோல் இருக்கும் - சம்மந்தமே இல்லாமல். இந்த மரமும் இருக்காது என்றுதான் அவள் அன்று கூறினாள். ஆனால் இன்று நானும் இருக்கிறேன், திடலும் இருக்கிறது. அவள் பொய் சொல்லியிருக்க வேண்டும். பேபியும் அதேபோல ஏதோ உளறுகிறாள். இந்தத் திடல் போய்விட்டால் நான் வெளியுலகை எப்படிப் காண்பேன்? இந்த திடலால் மட்டுமே நான் இங்கு இருக்கிறேன். அது இல்லையென்றால் நானும் இருக்கவேண்டாம். நான் எப்படி மழையை ரசிப்பேன்? 

***

“எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்த பூனைகளுக்கு எத்தனை ஆண்டுகள் தீனி வைக்க முடியும்? பாட்டி ஓய்வெடுத்ததன் பிறகு 30 ஆண்டுகள் செய்தார். நானோ படிக்கிறேன். பூனைகள் இங்கு எங்கேயாவதுதான் இருக்கும். இல்லை, கண்டிப்பாக வேறு எங்கேயாவது ஓடிவிடும்...” இவ்வாறெல்லாம் எண்ணும்போது லியோ தொடக்கப்பள்ளியில் இருந்தான். எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கவேண்டும், நன்றியோடும் கடவுள் எனக்கு இதை வகுக்கவில்லை என மீண்டும் மீண்டும் அம்மாவின் சொற்களை மனதில் ஒப்பித்துக்கொண்டு மனதுக்குள் தேம்பினான். 

திடலில் கட்டுமானம் நடக்கப்போவதை லியோவிடம் தயக்கத்துடன் கூறிய பின்னர், “எதுவும் நிரந்தரமில்லை” என்றாள் விம்லா. அப்படிச் சொல்லவே அவளுக்கு வெட்கமாக இருந்தது. லியோ திடலை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். இப்பூனைகள் நிரந்தரம் இல்லையா? அவை எங்கு போகும்? தீனிக்கு என்ன செய்யும்? ஏதோ திட்டமிட்டவனாய் எழுந்தான். திடுக்கிட்ட விம்லாவின் கைகளிலிருந்து சிறு கத்தி நழுவியது. லிஹூவா லியோவின் மடியிலிருந்து தாவி மரத்தில் குதித்தது. சட்டென்று தனது உடலை சிலிர்த்துக்கொண்டு மழைத்தண்ணீரை அது எங்கும் தெளித்தது. 

டப்டப்டப்டப்டப்.... மழை!

குறிப்புச் சொற்கள்