மூத்தோரின் தசைகளைச் சீர்செய்யும் உடற்பயிற்சி

மூத்தோரின் தசைகளைச் சீர்செய்யும் உடற்பயிற்சி

2 mins read
1207427a-52dd-45ad-8653-3755bf38deb6
உடற்பயிற்சி செய்யும் முதியவர். - படம்: கெட்டி இமேஜஸ் 

டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியும் மேலும் சில நிறுவனங்களும் இணைந்து நடத்திய ஆய்வில், உடற்பயிற்சி எவ்வாறு தசைகள் முதுமையடைவதைத் தடுக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு எம்டார்க்1 (mTORC1) எனும் புரத அமைப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

எம்டார்க்1 (mTORC1), புதிய புரதங்களை உருவாக்குவதற்கும் தசைகளில் பழைய கழிவுகளை அகற்றுவதற்கும் இடையிலான சமநிலையைத் தீர்மானிக்கிறது.

தசைகள் ஆரோக்கியமாக இருக்கும்போது ஃபாக்ஸோஸ் (FOXOs) எனப்படும் புரதங்கள் இந்தச் சமநிலையைப் பராமரிக்கின்றன.

ஆனால் வயதாகும்போது, இந்த FOXO புரதங்களின் செயல்பாடு குறைந்து, டேஃப்1 (DEAF1) என்ற மரபணுவின் அளவு அதிகரிக்கிறது.

இந்த டேஃப்1(DEAF1) மரபணு அதிகரிப்பால், எம்டார்க்1 (mTORC1) ஒருவித அதிவேக நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இந்த நிலையில், தசைகள் புதிய புரதங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சேதமடைந்த புரதங்களைச் சுத்தம் செய்யும் பணியை அவை நிறுத்திவிடுகின்றன.

இந்தக் கழிவுகளின் தேக்கம் தசைநார்களைப் பலவீனமாக்கி, தளர்ச்சியை உண்டாக்குகிறது.

இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்பில் , உடற்பயிற்சி ஒரு மூலக்கூறாகச் செயல்படுகிறது.

உடற்பயிற்சி செய்யும்போது டேஃப்1 (DEAF1) அளவு குறைந்து, எம்டார்க்1 (mTORC1) மீண்டும் சமநிலைக்குத் திரும்புகிறது.

இதன் மூலம் தசைகள் கழிவுகளைத் திறம்பட வெளியேற்றி, தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்கின்றன.

உடற்பயிற்சியே முதுமைக்கு எதிரான சிறந்த கேடயம் என்றாலும், ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் டேஃப்1 (DEAF1) அளவு உயர்ந்துவிட்டால், வெறும் உடற்பயிற்சியால் மட்டும் அந்தப் பாதிப்பைச் சரிசெய்ய முடியாது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது எதிர்காலத்தில் உடற்பயிற்சி செய்ய முடியாத முதியவர்களுக்கும், அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் தேறி வருபவர்களுக்கும் உடற்பயிற்சியின் பலன்களை மருந்து மாத்திரைகள்மூலம் வழங்குவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்