102 மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கிய ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில் ‌‌

3 mins read
5a5ef1a7-ff89-4833-b998-97b0a34440fb
தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை பல்வேறு நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. - படம்: லாவண்யா வீரராகவன்
மாணவர்களின் கல்வித் தேர்ச்சி, மதிப்பெண்கள், குடும்ப வருமானம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு உபகார‌ச் சம்பளம் வழங்கப்படுகிறது.
மாணவர்களின் கல்வித் தேர்ச்சி, மதிப்பெண்கள், குடும்ப வருமானம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு உபகார‌ச் சம்பளம் வழங்கப்படுகிறது. - படம்: ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில்

ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவிலின் 28வது ஆண்டு கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் விழா சனிக்கிழமை (ஜனவரி 6) நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் நடந்த இவ்விழாவில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கிவரும் கோவில் நிர்வாகத்தினர், இதற்காக $50,000 முதல் $60,000 வரை செலவிடுவதாகத் தெரிவித்தனர்.

மொத்தம் 102 மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. உபகாரச் சம்பளம் பெறும் 65 மாணவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், தொண்டூழியர்கள் உட்பட 220 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் திருமதி சரோஜினி பத்மநாதன் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினார்.

தொடக்கநிலை கல்வி தொடங்கி இவ்வாண்டு வரை கோவிலின் உபகாரச் சம்பளம் பெற்று வந்துள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஷர்மினி குமார், ஷர்மன் குமார் இருவரும், “எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். தந்தையின் ஒரே வருமானத்தில் அனைவரும் சாப்பிட்டு, உடுத்தி வாழ்வதே சற்று கடினமான ஒன்றுதான்.

“இந்நிலையில், கோவில் மூலம் தொடர்ந்து கிடைத்துவரும் உபகாரச் சம்பளம் மிகவும் உதவியாக இருக்கிறது. நாங்கள் தடையின்றி கல்வி கற்க அது ஏதுவாக அமைகிறது,” என்றனர்.

ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில் தொடர்ந்து செய்துவரும் உதவிக்கு தாம் மிகவும் கடமைப்பட்டு இருப்பதாகச் சொன்ன பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் ஷர்மன் குமார், 19, “கோவிலில் செயல்படும் தொண்டூழியர்களையும் பல்வேறு சமூக மன்றங்களில் எங்களுக்கு உதவி வருவோரையும் பார்க்கையில், நானும் எதிர்காலத்தில் என்னால் இயன்றவரை சமூகத்துக்குச் சேவையாற்றவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது,” என்றார்.

எதிர்காலத்தில் தொழில்நுட்ப வணிகத்துறையில் கால்பதிக்க எண்ணும் தமக்கு இந்த உபகாரச் சம்பளம் உதவியாக இருக்கும் என்றார் பட்டயக் கல்வி பயின்று வரும் ஷர்மினி குமார், 18.

உளவியல் இளங்கலைப் படிப்பில் இறுதியாண்டு மாணவரான கதிர்வேலன் அசோகன், 25, “எனக்கு கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில் உபகாரச் சம்பளம் வழங்கி வருகிறது. இது பெரும் ஊக்குவிப்பு. தனியார் மருந்தகத்தில் பாதுகாவல் அதிகாரியாக பணியாற்றும் என் தந்தைக்கு என் கல்விச் செலவு குறைவது உதவியாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத் துறை இறுதியாண்டு மாணவியான பிரீத்தி சந்திரசேகர், 24, கடந்த ஆண்டுத் தேர்வில் 4.5 புள்ளிகள் (ஜிபிஏ) பெற்று ஹானர்ஸ் பட்டக்கல்வியில் முதல்நிலை தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவ்வாண்டு உபகாரச் சம்பளம் பெற்ற அவர், “இந்த உபகாரச் சம்பளம் உற்சாகம் அளிக்கிறது. பல நிலைகளிலும் வெற்றிபெற்று இன்னும் பல பரிசுகளையும் அங்கீகாரங்களையும் பெறவேண்டும் எனும் ஊக்குவிப்பையும் அளிக்கிறது,” எனச் சொன்னார்.

ஒவ்வோர் ஆண்டும் 100 முதல் 150 மாணவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளம் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வித் தேர்ச்சி, குடும்பச் சூழ்நிலை உள்ளிட்ட பல அம்சங்களைக் கருத்தில்கொண்டு உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது.

இனம், மொழி என எந்தப் பாகுபாடுமின்றி அனைவர்க்கும் வழங்கப்படுவது இந்த உபகாரச் சம்பளத்தின் சிறப்பு என ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில் நிர்வாகக் குழு உறுப்பினர் பார்த்திபன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்