அக்கம்பக்கத்தினருடன் சமூகமாக இணைந்து, மகிழ்ச்சியாகப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஏழு குடியிருப்புப் பேட்டைகளில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
‘ஒன் கவுன்டவுன் 2026’ நிகழ்ச்சியின் ஓர் பகுதியாக, குடும்பங்களுக்கான செயல்பாடுகளும் அக்கம்பக்கத்தினரை இணைக்கும் நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
பூன் லே, கியட் ஹொங், மார்சிலிங், நீ சூன், பொங்கோல், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் ஆகிய ஏழு பேட்டைகளில் டிசம்பர் 31ஆம் தேதி இந்தச் சிறப்புக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 700 அடித்தளத் தலைவர்களும் தொண்டூழியர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
இசைவழிக் கொண்டாட்டம்
இளம், மூத்த குடியிருப்பாளர்களை இணைக்கும் முயற்சியில் இசை ஒரு முக்கிய அம்சமாக அமையவுள்ளது. அவ்வகையில் உட்லண்ட்ஸ் நீர்முகப்புக் கொண்டாட்டத்தில், குடியிருப்பாளர்கள் ‘டிஜே’ எனப்படும் இசை நிகழ்ச்சிகள், உணவு, பானங்கள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
ஹார்ட்ஸ் @ பூன் லேயில் 1960களில் தொடங்கி தற்போது வரையுள்ள பாடல்களை, சமூக வாக்கெடுப்புகள் மூலம் தேர்ந்தெடுத்து, அதன்படி தயார்செய்யப்பட்ட பாடல்கள் ஒலிக்கப்படும்.
குடும்பங்களை இணைக்கும் கொண்டாட்டம்
குழந்தைகளுக்கான திருவிழா, கைவினைப் பொருள்கள் வடிவமைப்பு நிகழ்ச்சிகள், குதித்து விளையாடும் காற்று ஊதப்பட்ட பெரிய பொம்மை, காணொளி விளையாட்டுகள் ஆகியவை நமது தெம்பனிஸ் நடுவத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அடங்கும்.
ஒன் பொங்கோல் நிகழ்ச்சியில் காணொளி விளையாட்டுகள், நேரடி இசை நிகழ்ச்சி, கராத்தே செயல்விளக்க அமர்வு, தீ விளையாட்டு சாகசங்கள் (fire circus) ஆகியவற்றை குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம்.
மாறுபட்ட நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
நீ சூன் நிகழ்ச்சியில் நமக்கு நாமே கடிதமெழுதி அதனை அடுத்த ஆண்டு பெறும் வகையில் அமையும் ‘துணிவுடன் கனவு காணுங்கள்’ எனும் அமர்வு, மார்சிலிங் வட்டாரத்தில் சமூகமாக இணைந்து வண்ணம் தீட்டும் சுவரோவியங்கள் ஆகியவை இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், கியட் ஹொங்கில், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு நிலைத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்ட ஆடைகளைப் புற்றுநோயிலிருந்து மீண்டோர் அணிந்து காட்சிப்படுத்தும் அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சமூகக் கொண்டாட்டங்களில் ஈடுபட குடியிருப்பாளர்கள் அருகில் உள்ள சமூக மன்றம், வசிப்போர் குழு, அக்கம்பக்கக் குழு, வசிப்போர் தொடர்புக் கட்டமைப்பு ஆகியவற்றை நாடலாம்.

