தீவிரமடைகிறது மாணவர் போராட்டம்: டெல்லியில் 16 ரயில் நிலையங்கள் மூடல்

தீவிரமடைகிறது மாணவர் போராட்டம்: டெல்லியில் 16 ரயில் நிலையங்கள் மூடல்

2 mins read
71708ec5-9ef5-4be3-bb87-c2ffab4d1069
நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். - படம்: த பிரிண்ட்
Google News Preferred Icon

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தலைநகர் டெல்லியில் மாணவர்களும் இளையர்களும் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் என்னும் இடத்தில் கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சியினரின் (சிஜேபி) ஆதரவுடன் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திங்கட்கிழமை (ஜூலை 20) முதல் தீவிரமடைந்து வரும் போராட்டத்தில் இளையர்களும் மாணவர்களும் பெருமளவில் கலந்துகொண்டு வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

ஆயினும், கலைந்து செல்லாமல் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியிருப்பதாக சிஜேபி புதன்கிழமை தெரிவித்தது. தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றத் தவறினால், மேலும் பல மில்லியன் பேர் போராட்டத்தில் இணைவார்கள் என அக்கட்சியின் நிர்வாகி அஷுதோஷ் ரங்கா கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டுக்கு முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு காவல்துறையின் பேருந்தில் ஏற்றப்பட்டார்.

ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்தால் பாதுகாப்புக் கருதி டெல்லியின் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் புதன்கிழமை (ஜூலை 22) தற்காலிகமாக மூடப்பட்டன.

கல்வி அமைச்சர் உறுதி

இதற்கிடையே, போராடும் இளையர்களின் கவலைகளைக் களையவும் தேர்வில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் மோடியின் மத்திய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் போராடத் தொடங்கிய பின்னர் அவரது கருத்து முதன்முறை வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு குறித்து விவாதிக்கவும் இளையர்களின் நியாயமான கவலைகள் ஒவ்வொன்றிற்கும் அவையில் தீர்வு காணவும் அரசாங்கம் 100 விழுக்காடு உறுதியாக உள்ளது என்று அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
போராட்டம்டெல்லிகைது