ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை ஆகட்ஸ் 12க்கு ஒத்திவைப்பு

2 mins read
efc26d99-78df-4a7f-9d73-e89fe4b4c2d3
ராகுல் காந்தி. - படம்: இந்திய ஊடகம்

சுல்தான்பூர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மீதான விசாரணை ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

வழக்கு தொடர்பான மனு வெள்ளிக்கிழமை (ஜூலை 26) விசாரணைக்கு வந்தது. அதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்திற்கு ராகுல் காந்தி சென்றார்.

ராகுல் காந்தி தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின்பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

அதே ஆண்டு நடைபெற்ற கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது ‘அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி’ என்னும் சா்ச்சைக் கருத்தை ராகுல் தெரிவித்தாா்.

அதனை எதிா்த்து பாஜகவைச் சோ்ந்த விஜய் மிஸ்ரா என்பவா் சாா்பில் 2018 ஆகஸ்ட் மாதம் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.

அப்போது, அமித் ஷா பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தாா்.

இந்த வழக்கில் ராகுலுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது.

அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு இவ்வாண்டு பிப்ரவரி 20ஆம் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையானார்.

அதைத் தொடா்ந்து, அந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னா் வெவ்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூலை 26ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது ராகுல் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி முன்னிலையான ராகுல் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அரசியல் காரணங்களுக்காகவும் தன் பெயரைக் கெடுக்கும் நோக்கத்திற்காகவும் புனையப்பட்ட வழக்கு இது என்று அவர் கூறினார். தொடர்ந்து நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்